தண்டவாளத்தில் காலி காஸ் சிலிண்டர் தொடரும் ரயில் கவிழ்ப்பு சதி திட்டங்கள்
தண்டவாளத்தில் காலி காஸ் சிலிண்டர் தொடரும் ரயில் கவிழ்ப்பு சதி திட்டங்கள்
ADDED : அக் 14, 2024 12:19 AM

ரூர்கி: உத்தரகண்ட் அருகே தண்டவாளத்தில் காஸ் சிலிண்டர் இருப்பதை கண்டு, சரக்கு ரயில் ஓட்டுனர் உடனடியாக உயரதிகாரிகளுக்கு தகவல் தந்ததால் அதிர்ஷ்டவசமாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
உத்தரகண்டில் உள்ள ரூர்கியை நோக்கி சரக்கு ரயில் ஒன்று நேற்று அதிகாலை சென்றது.
தாந்தேரா ரயில் நிலையத்தைக் கடந்து லாந்தவுரா நிலையத்தை நோக்கி சென்ற போது, தண்டவாளத்தில் காஸ் சிலிண்டர் கிடப்பதை கண்ட சரக்கு ரயில் டிரைவர், தாந்தேரா ரயில் நிலைய ஸ்டேஷன் மாஸ்டருக்கு தகவல் அளித்தார்.
இருப்புப் பாதையில் கிடந்த சிலிண்டர் காலியாக இருக்கும் தகவலையும் அவர் தெரிவித்தார். இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த ரயில்வே போலீசார், காலி காஸ் சிலிண்டரை கைப்பற்றி தாந்தேரா ரயில் நிலையத்துக்கு எடுத்துச் சென்றனர்.
உடனடியாக தகவல் அளிக்கப்பட்டதால், பெரும் ரயில் விபத்து தவிர்க்கப்பட்டது. இது குறித்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில மாதங்களாக ரயில் தண்டவாளத்தில் சிமென்ட் பிளாக்குகள், கட்டைகள், சிலிண்டர்கள் போன்றவற்றை வீசி, ரயில் கவிழ்ப்பு சதியில் மர்ம நபர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த ஜூன் மாதம் துவங்கி, இதுவரை 24 ரயில் கவிழ்ப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கடந்த ஆகஸ்டில் 15 சம்பவங்களும், செப்டம்பரில் ஐந்து சம்பவங்களும் இதுபோல் நிகழ்ந்துள்ளன. உத்தர பிரதேசம் கான்பூரிலும் இது போல் காஸ் சிலிண்டர் ரயில் பாதையில் போடப்பட்டது,
இன்ஜின் டிரைவரால் கண்டுபிடிக்கப்பட்டு விபத்து தவிர்க்கப்பட்டது.
ரயில் கவிழ்ப்பு முயற்சியாக தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் நடந்து வரும் சூழலில், அதை தவிர்க்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை ரயில்வே நிர்வாகம் முடுக்கிவிட்டுள்ளது.