ADDED : நவ 12, 2024 12:08 AM

தமோஹ்: மத்திய பிரதேசத்தில் தண்டவாளத்தில் கிடந்த உடல்களை அகற்றும் போது, அந்த வழியாக வந்த ரயில் மோதியதில் எஸ்.ஐ.,யின் கை துண்டானது.
மத்திய பிரதேசத்தின் தமோஹ் மாவட்டத்தில் உள்ள காரையா பாதோலி ரயில் நிலையம் அருகே ரயில் மோதி இருவர் உயிரிழந்ததாக பந்தாக்பூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, பணியில் இருந்த சப் - இன்ஸ்பெக்டர் ராஜேந்திர மிஸ்ரா சம்பவ இடத்துக்கு சென்று தண்டவாளத்தில் கிடந்த உடல்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டார். அவருடன் சென்ற போலீஸ் டிரைவர் யாவர் கானும் எஸ்.ஐ.,க்கு உதவினார்.
அப்போது, அந்த வழியாக வந்த மற்றொரு ரயில், இருவர் மீதும் மோதியது. இதில், எஸ்.ஐ., ராஜேந்திர மிஸ்ராவின் கை துண்டானது. யாவர் கானும் படுகாயமடைந்தார்.
இருவரும் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து விசாரணை நடக்கிறது.