ராணுவத்தின் அக்னி வீரர்களாக சேர மாவட்ட இளைஞர்களுக்கு பயிற்சி
ராணுவத்தின் அக்னி வீரர்களாக சேர மாவட்ட இளைஞர்களுக்கு பயிற்சி
ADDED : பிப் 19, 2024 07:16 AM

உத்தர கன்னடா: ''ராணுவத்தின் அக்னி வீரர் திட்டத்தில் சேர விரும்பும் மாவட்ட இளைஞர்களுக்கு, இலவச பயிற்சி உட்பட அனைத்து உதவிகளையும் மாவட்ட நிர்வாகம் செய்து தரும்,'' என, உத்தர கன்னடா மாவட்ட கலெக்டர் கங்குபாய் தெரிவித்தார்.
இது தொடர்பாக நேற்று அவர் அளித்த பேட்டி:
ராணுவத்தில் அக்னி வீரர் திட்டத்தில் சேர்ந்து, தேச பாதுகாப்பு என்ற கடமையை மாவட்ட இளைஞர்கள் மேற்கொள்ள வேண்டும்.
மங்களூரு ராணுவ அலுவலகம், ராணுவத்தில் அக்னி வீரர் ஆட்சேர்ப்புக்காக விண்ணப்பங்கள் வரவேற்றுள்ளன. பிப்., 13ம் தேதி முதல் மார்ச் 22 ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்க அவகாசம் உள்ளது. http//www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பித்தவர்களுக்கு முதலில் எழுத்து தேர்வு நடத்தப்படும். அதன் பின் உடல் தகுதி நடத்தப்படும்.
மாவட்டத்தில் உள்ள 35 பிறப்பு பதிவு செய்யும் அலுவலகத்தில் விண்ணப்பிக்க தேவையான உதவிகள் வழங்கப்படும். விண்ணப்பதாரர்களுக்கு எழுத்து தேர்வு, உடற் தகுதி தேர்வுக்கான இலவச பயிற்சி அளிக்க, மாவட்டத்தில் உள்ள முன்னாள் ராணுவ வீரர்கள் சங்கம் முன் வந்துள்ளது.
அவர்களின் தொடர்பு எண்களும் வழங்கப்படும். விண்ணப்பித்த மாவட்ட இளைஞர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படும்.
ராணுவத்தில் சேர குறைந்தபட்சம் 8ம் வகுப்பு முதல் எஸ்.எஸ்.எல்.சி., - பி.யு.சி., டிப்ளமோ, ஐ.டி.ஐ., தேர்ச்சியுடன், 17 வயது முதல் 21 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம். தகுதிக்கு ஏற்ப தொழில்நுட்பம் மற்றும் பொது பணிகளில் சேர்க்கப்படுவர்.
ஆரம்பத்தில் 30,000 ரூபாயும், பின் 40,000 ரூபாயும் வழங்கப்படும். மூன்று ஆண்டுகளுக்கு பின், அவர்களின் செயல்பாடு திருப்திகரமாக இருந்தால், ராணுவத்தில் தொடர்ந்து சேவை செய்யலாம்.
ராணுவ ஆட்சேர்ப்பு மிகவும் வெளிப்படையானது. எழுத்து தேர்வு, உடல் தகுதி மட்டுமே தேர்வுக்கு பரிசீலிக்கப்படும். இடைத்தரகர்களின் வார்த்தைகளுக்கு தேர்வர்கள் ஏமாற வேண்டாம். மாவட்டத்தின் அனைத்து தாலுகாக்களிலும் உள்ள முன்னாள் ராணுவத்தினர், மாவட்ட தேர்வர்களுக்கு பயிற்சி, உதவி செய்வர்.
இவ்வாறு அவர் கூறினார்.

