தேர்தல் வந்துருச்சு; சட்டசபையில் ஒரு தொகுதியில் இட ஒதுக்கீடு தாங்க: காஷ்மீரில் வலுக்குது மூன்றாம் பாலினத்தவர்கள் கோரிக்கை!
தேர்தல் வந்துருச்சு; சட்டசபையில் ஒரு தொகுதியில் இட ஒதுக்கீடு தாங்க: காஷ்மீரில் வலுக்குது மூன்றாம் பாலினத்தவர்கள் கோரிக்கை!
ADDED : செப் 01, 2024 06:47 AM

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் உள்ள 90 தொகுதியில், ஒரு தொகுதியில் இட ஒதுக்கீடு வேண்டும் என மூன்றாம் பாலினத்தவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீரில் உள்ள 90 தொகுதிகளுக்கு சட்டசபை தேர்தல் வரும் செப்., 18ம் தேதி முதல் அக்டோபர் 1ம் தேதி வரை மூன்று கட்டங்களாக நடைபெற உள்ளது. தேர்தல் முடிவுகள் அக்டோபர் 8ம் தேதி வெளியாகும். இந்நிலையில் ஜம்மு காஷ்மீரில் உள்ள மூன்றாம் பாலின சமூகத்தினர், சட்டசபையில் தங்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க கோரி பேரணி நடத்தினர். விக்ரம் கவுக் பகுதியில் துவங்கி பேரணி ஹரி சிங்பார்க் வரை நடந்தது.
இடஒதுக்கீடு
பேரணியை தலைமையேற்று நடத்திய, ரவீனா மஹந்த் என்பவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: சட்டசபையில் 90 இடங்கள் உள்ளன. ஒன்று கூட எங்களுக்கு ஒதுக்கப்படவில்லை. ஒரு இடமாவது ஒதுக்கப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அப்போது தான் எங்கள் பிரச்னைகளை தீர்க்க நாங்கள் கோரிக்கை விடுக்க முடியும். அரசு எங்களது பேச்சை கேட்க வேண்டும்.
உதட்டளவில் பேச்சு மட்டுமே!
அரசியல் கட்சிகளால் நீண்டகாலமாக மறுக்கப்பட்ட தேர்தல் செயல்பாட்டில், திருநங்கைகளின் இடஒதுக்கீடு மற்றும் பிரதிநிதித்துவ கோரிக்கைக்கு குரல் கொடுக்க இந்த பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகள் ஜனநாயகத்தைப் பற்றி பேசுகிறது. எங்களுக்கு அரசு வேலைகளில் இடஒதுக்கீடு அல்லது கல்வி நிறுவனங்களில் தனி கழிப்பறைகள் இல்லாததால் குறித்து வெறும் உதட்டளவில் பேசுவதோடு நின்று விடுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.