ரூ.414 கோடி நிலுவை தொகை கேட்டு அரசுக்கு போக்குவரத்து எம்.டி., கடிதம்
ரூ.414 கோடி நிலுவை தொகை கேட்டு அரசுக்கு போக்குவரத்து எம்.டி., கடிதம்
ADDED : டிச 23, 2024 07:08 AM

பெங்களூரு: நிலுவையில் உள்ள 414 கோடி ரூபாயை விடுவிக்கும்படி, அரசின் நிதித் துறைக்கு, வடமேற்கு கர்நாடக அரசு போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குனர் பிரியங்கா கடிதம் எழுதி உள்ளார்.
கர்நாடகாவில் அரசு பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் திட்டம் அமலில் உள்ளது.
இந்த திட்டத்தை அமல்படுத்திய பின், அரசின் நான்கு போக்குவரத்துக் கழகங்களும் நஷ்டத்தில் இயங்குவதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றன. ஆனால் அரசு மறுக்கிறது. 'சக்தி' திட்டத்தால் லாபம் கிடைப்பதாக சொல்கின்றனர்.
ஆனாலும் நான்கு போக்குவரத்துக் கழகங்களுக்கும், அரசு நிலுவை தொகை வைத்து இருப்பதாக சொல்லப்படுகிறது.
இதுதொடர்பாக, வடமேற்கு கர்நாடக அரசு போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குனர் பிரியங்கா நேற்று அளித்த பேட்டி:
கடந்த ஆண்டு ஜூனில் இருந்து, 'சக்தி' திட்டம் அமலில் உள்ளது. வடமேற்கு கர்நாடக அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் இயக்கப்படும் பஸ்களில் தினமும் 25 லட்சம் பேர் பயணம் செய்கின்றனர். இதில் 16 லட்சம் பேர் பெண் பயணியர்.
'சக்தி' திட்டத்திற்காக அரசிடம் இருந்து மாதம் 120 கோடி ரூபாய் கிடைக்க வேண்டும். ஆனால் எங்களுக்கு 102 கோடி ரூபாய் கிடைக்கிறது.
எங்களுக்கு 414 கோடி ரூபாய் பாக்கி உள்ளது. இதை விடுவிக்கும்படி அரசின் நிதித் துறைக்கு கடிதம் எழுதினேன். கூடிய விரைவில் பணம் விடுவிக்கப்படும் என்று, நிதி துறையில் இருந்து பதில் வந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

