மார்ச் 4 முதல் வேலை நிறுத்தம் போக்குவரத்து ஊழியர்கள் முடிவு
மார்ச் 4 முதல் வேலை நிறுத்தம் போக்குவரத்து ஊழியர்கள் முடிவு
ADDED : பிப் 22, 2024 07:09 AM
பெங்களூரு: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, போக்குவரத்து கழக ஊழியர்கள் மார்ச் 4ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர். இதனால் மாநிலத்தில் போக்குவரத்து ஸ்தம்பிக்கும் அபாயம் எழுந்துள்ளது.
கர்நாடகாவில் கடந்த பா.ஜ., ஆட்சியின்போது, ஊதிய உயர்வு உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 2021ல் போக்குவரத்து ஊழியர்கள் காலவரையற்ற போராட்டம் நடத்தினர். இதில் பங்கேற்ற 200க்கும் மேற்பட்ட ஊழியர்கள், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர். பின், அரசுடன் பேச்சு நடத்திய பின், சிலர் மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டனர்.
ஓய்வுபெற்ற போக்குவரத்து கழக ஊழியர்கள் மற்றும் தற்போதைய ஊழியர்கள் சங்கத்தினர், பெங்களூரு சுதந்திர பூங்காவில் நேற்று முன்தினம், தங்கள் குடும்பத்துடன் ஒரு நாள் அடையாள போராட்டம் நடத்தினர்.
கோரிக்கை விபரம்:
சம்பள உயர்வு நிலுவைத் தொகையை, 2022 ஜனவரி 1 முதல் வழங்க வேண்டும்
ஓய்வுபெற்ற ஊழியர்களின் சம்பள உயர்வை 2020 ஜன., 1 முதல் அமல்படுத்த வேண்டும்
2021 வேலை நிறுத்தத்தின்போது பா.ஜ., அரசு எடுத்த அனைத்து வகையான தண்டனைகளையும் திரும்பப் பெற வேண்டும்
மின்சார பஸ்களை, போக்குவரத்து கழகங்களே இயக்க வேண்டும்
ஊழலை கட்டுப்படுத்த வேண்டும்
ஒருதலைபட்சமாக சுற்றறிக்கை கொண்டு வரும் வழக்கத்தை நிறுத்தி, தொழிற்சங்கங்களுடன் பேச்சு நடத்தி, நல்ல தொழில் உறவுகளை ஏற்படுத்த வேண்டும்
அரசு ஊழியர்கள் ஊதியத்தை, போக்குவரத்து ஊழியர்களுக்கும் வழங்க வேண்டும்.
மேற்கண்ட கோரிக்கைகளை, கர்நாடகாவின் நான்கு போக்குவரத்துக் கழக ஊழியர் சங்கத்தினர் வலியுறுத்தல்.
தற்போதைய அரசு, நீதி வழங்கக் கோரி, பெங்களூரு சுதந்திர பூங்காவில் மார்ச் 4ம் தேதி, போக்குவரத்து தொழிலாளர்கள் ஒருநாள் அடையாள போராட்டம் நடத்த உள்ளனர். அன்று அரசு உரிய பதில் அளிக்காவிட்டால், காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டமாக தொடரவும் திட்டமிட்டுள்ளனர்.
மார்ச் 4ம் தேதி முதல் காலவரையற்ற போராட்டத்தை துவக்கினால், பஸ் போக்குவரத்து ஸ்தம்பிக்கும் அபாயம் உருவாகி உள்ளது.