ADDED : நவ 21, 2024 05:24 AM

பெங்களூரு: பெங்களூரின் விக்டோரியா, வாணி விலாஸ் உட்பட அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது.
பி.எம்.சி.ஆர்.ஐ., எனும் பெங்களூரு மருத்துவ கல்லுாரி மற்றும் ஆய்வகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவமனைகளில் மாணவர் சேர்க்கை, சிகிச்சை கட்டணம், சான்றிதழ் அளிக்கும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக, பி.எம்.சி.ஆர்.ஐ., இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
இதை தொடர்ந்து விக்டோரியா, வாணி விலாஸ், சூப்பர் ஸ்பெஷாலிட்டி, மின்டோ கண் மருத்துவமனை, டிரவுமா எனும் விபத்து மற்றும் அவசர கால சென்டர்களில் அளிக்கப்படும் சிகிச்சை கட்டணம் உயர்ந்துள்ளது.
எவ்வளவு?
இரண்டு நோயாளிகள் உள்ள ஸ்பெஷல் அறை கட்டணம் 750 ரூபாயில் இருந்து 1,000 ரூபாயாகவும்; ஒரு நோயாளி உள்ள அறை 750 ரூபாயில் இருந்து, 2,000 ரூபாயாகவும்; பொது வார்டு கட்டணம் 15 ரூபாயில் இருந்து 20 ரூபாயாகவும்; ஓ.பி.டி., பதிவு கட்டணம் 10 ரூபாயில் இருந்து 20 ரூபாயாகவும்; உள் நோயாளிகள் சேர்க்கை கட்டணம் 25 ரூபாயில் இருந்து 50 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
உள் நோயாளி சிகிச்சை பெறும் படுக்கை கட்டணம், 30 ரூபாயில் இருந்து 50 ரூபாயாகவும்; மருத்துவ பரிசோதனை, காயம், உடல் திறன் பரிசோதனை சான்றிதழ் கட்டணம் 250 ரூபாயில் இருந்து 300 ரூபாயாகவும்; உணவு தொடர்பான ஆலோசனை கட்டணம் 50 ரூபாயில் இருந்து, 100 ரூபாயாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் கூறியதாவது:
பல ஆண்டுகளாக அரசு மருத்துவமனைகளில், சிகிச்சை கட்டணம் உயர்த்தப்படவில்லை. ஏழைகளுக்கு சுமை ஏற்படாமல், குறைந்த அளவில் சிகிச்சை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
தற்போது பி.எம்.சி.ஆர்.ஐ., கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவமனைகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. சுகாதாரத்துறைக்கு உட்பட்ட மருத்துவமனைகளில் சிகிச்சை கட்டணத்தை உயர்த்த ஆலோசிக்கிறோம்.
உத்தரவு
பி.பி.எல்., ரேஷன் கார்டுதாரர்களுக்கு, சிகிச்சை கட்டணம் உயர்த்த கூடாது, ஏ.பி.எல்., கார்டுதாரர்களுக்கு சுமை ஏற்படாமல் கட்டணத்தை உயர்த்தும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளோம்.
கொரோனாவுக்கு முன் சிகிச்சை கட்டணம் அதிகரிக்கப்பட்டது. அதன்பின் அதிகரிக்கவில்லை. தற்போதைய கட்டண உயர்வு தொகை, அரசுக்கு வராது.
அந்தந்த மருத்துவமனை நிர்வகிப்புக்கு, பழுது பார்ப்பு பணிகள் மற்றும் துப்புரவு பணிகளுக்கும் பயன்படுத்தப்படும்.
அரசு மருத்துவமனைகளின் சிகிச்சை கட்டண உயர்வுக்கும், வாக்குறுதி திட்டங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இரண்டுக்கும் முடிச்சு போடுவது சரியல்ல. முந்தைய அரசுகள் எந்த கட்டணத்தையும் உயர்த்தவில்லையா.
இவ்வாறு அவர் கூறினார்.