ADDED : செப் 26, 2024 11:46 PM

பாலக்காடு: பாலக்காடு அருகே, குடும்பத் தகராறு காரணமாக, பழங்குடியின பெண்ணை கொலை செய்த வழக்கில், கணவனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், அட்டப்பாடி சோலையூர் தேக்குமுக்கி பகுதியை சேர்ந்தவர் ரங்கசாமி, 64. இவரது மனைவி வள்ளி, 40.
தினமும் குடிபோதையில் வீட்டுக்கு வரும் ரங்கசாமி, மனைவியுடன் தகராறு செய்துள்ளார். கடந்த, 2014, அக்., 8ம் தேதி இரவு குடிபோதையில் வீட்டுக்கு வந்த ரங்கசாமி, மனையுடன் வாக்குவாதம் செய்துள்ளார். அப்போது, ஆத்திரமடைந்த ரங்கசாமி, மனைவியை சுத்தி மற்றும் மரத்தடியால் தாக்கி கொலை செய்தார். தகவல் அறிந்து வந்த, அகளி போலீசார், வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். குற்றப்பத்திரிகை சமர்ப்பித்த இந்த வழக்கு விசாரணை, மண்ணார்க்காடு பழங்குடியின சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று நடந்தது.
குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையும், ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து, நீதிபதி ஜோமோன் ஜோன் தீர்ப்பளித்தார். அபராத தொகையை செலுத்த தவறினால், மேலும் இரண்டு ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பளித்தார். அரசு தரப்பில், வக்கீல் ஜெயன் ஆஜரானார்.