ரூ.1,000 கோடி பினாமி சொத்து வழக்கு அஜித் பவாரை விடுவித்தது தீர்ப்பாயம்
ரூ.1,000 கோடி பினாமி சொத்து வழக்கு அஜித் பவாரை விடுவித்தது தீர்ப்பாயம்
ADDED : டிச 08, 2024 05:03 AM

மும்பை: பினாமி பெயரில் சொத்து குவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து, மஹாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் விடுவிக்கப்பட்டார். இதையடுத்து, 1,000 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை முடக்கி வைத்த நடவடிக்கையை, வருமான வரித்துறை விலக்கிக் கொண்டது.
மஹாராஷ்டிராவில் முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையில், பா.ஜ., சிவசேனா, தேசியவாத காங்., அடங்கிய மஹாயுதி கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது.
துணை முதல்வராக உள்ள தேசியவாத காங்., தலைவர் அஜித் பவார் மற்றும் அவருடைய குடும்பத்தார் மீது, பினாமி பெயரில் சொத்து குவித்ததாக 2021ல் வழக்கு தொடரப்பட்டது.
அப்போது பல்வேறு இடங்களில் சோதனை செய்த வருமான வரித்துறை, பினாமி சொத்து தடுப்புச் சட்டத்தின்கீழ், 1,000 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை முடக்கியது.
மஹாராஷ்டிராவில் பல நிலங்கள், டில்லியில் ஒரு குடியிருப்பு, கோவாவில் ரிசார்ட் உள்ளிட்டவை இதில் அடங்கும்.
அஜித் பவார், அவரது மனைவி சுனேத்ரா, மகன் பார்த் பவார் ஆகியோர் மீது, பினாமி பெயரில் சொத்து குவித்ததாக வழக்கு தொடரப்பட்டது.
இது தொடர்பான வழக்கை விசாரித்த பினாமி சொத்து பரிவர்த்தனை மேல்முறையீட்டு தீர்ப்பாயம், நேற்று முன்தினம் உத்தரவு பிறப்பித்தது.
'பினாமி பெயர்களில் அஜித் பவார் சொத்து வாங்கியதும், அதற்கு அவரோ, அவருடைய குடும்பத்தாரோ பண பரிவர்த்தனை செய்ததும் நிரூபிக்கப்படவில்லை' என, உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக முடக்கப்பட்ட, 1,000 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை விடுவித்து, வருமான வரித்துறை நேற்று உத்தரவிட்டுள்ளது.
கடந்த 5ம் தேதி, மீண்டும் துணை முதல்வராக பதவியேற்ற அஜித் பவாருக்கு, இந்த உத்தரவு பெரும் நிம்மதியை அளித்துள்ளது.