திரிணமுல் பிரமுகர் கொலை; மேற்கு வங்கத்தில் பதற்றம்
திரிணமுல் பிரமுகர் கொலை; மேற்கு வங்கத்தில் பதற்றம்
ADDED : ஏப் 29, 2024 06:32 AM
கோல்கட்டா : மேற்கு வங்கத்தில் இரு தரப்புக்கும் இடையே நிகழ்ந்த மோதலில், ஆளுங்கட்சியான திரிணமுல் காங்கிரஸ் பிரமுகர் உயிரிழந்தார். இதனால் அங்கு பதற்றம் நிலவுகிறது.
மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்குள்ள 42 லோக்சபா தொகுதிகளுக்கும் ஏழு கட்டங்களாக ஓட்டுப்பதிவு நடக்கும் என தலைமை தேர்தல் கமிஷன் அறிவித்தது.
இதன்படி, கடந்த 19ம் தேதி நடந்த முதற்கட்ட தேர்தலில், மூன்று லோக்சபா தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நடந்தது.
இந்நிலையில் மற்ற தொகுதிகளில், அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையே வடக்கு 24 பர்கனாஸ் மாவட்டத்தின் அர்ஜுன்புர் மேற்கு புரா பகுதியில் நேற்று முன்தினம் திரிணமுல் காங்., பிரமுகர் சஞ்சீவ் தாஸ் என்பவருக்கும், உள்ளூர் கவுன்சிலர் தரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது.
அப்போது, அங்கிருந்த செங்கற்களை எடுத்து மாறி மாறி இரு தரப்பினரும் வீசினர். இத்தாக்குதலில் சஞ்சீவ் தாஸ் படுகாயம் அடைந்து மயங்கி விழுந்தார். உடனே, அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து, 13 பேரை கைது செய்துள்ளனர்.
இதேபோல் அனந்தபூர் பகுதியில் பா.ஜ.,வினர் பேனர் கட்டியதில் திரிணமுல் காங்., பிரமுகர்கள் தாக்கியதில், பா.ஜ.,வைச் சேர்ந்த பெண் உறுப்பினர் சரஸ்வதி சர்கார் படுகாயம் அடைந்தார். இவர் தற்போது மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பதற்றம் நிலவுகிறது.

