பதவிப்பிரமாணம் செய்து வைக்கக்கோரி திரிணமுல் எம்.எல்.ஏ.,க்கள் போராட்டம்
பதவிப்பிரமாணம் செய்து வைக்கக்கோரி திரிணமுல் எம்.எல்.ஏ.,க்கள் போராட்டம்
ADDED : ஜூன் 26, 2024 10:34 PM

கோல்கட்டா: மேற்கு வங்க சட்டசபை இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற திரிணமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் இரண்டு பேர், சட்டசபையில் தங்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கக் கோரியதை கவர்னர் ஆனந்த் போஸ் நிராகரித்தார். இதையடுத்து, எம்.எல்.ஏ.,க்கள் இருவரும் சட்டசபையில் போராட்டம் நடத்தினர்.
மேற்கு வங்கத்தில் லோக்சபா தேர்தலுடன் இணைந்து, முர்ஷிதாபாத் மாவட்டத்தில் காலியாக இருந்த பாராநகர் மற்றும் பகவன்கோலா சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடந்தது.
இந்த இடைத்தேர்தலில், திரிணமுல் காங்கிரசைச் சேர்ந்த சயந்திகா பந்தோபாத்யாய் மற்றும் ரயத் ஹுசைன் சர்கார் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
வெற்றி பெற்ற இருவரையும் கவர்னர் மாளிகைக்கு வந்து பதவிப் பிரமாணம் செய்துகொள்ள, கவர்னர் மாளிகை தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டது.ஆனால் திரிணமுல் காங்கிரஸ் தரப்போ, இடைத்தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க சபாநாயகர் அல்லது துணை சபாநாயகருக்கு கவர்னர் ஒப்புதல் அளிப்பது தான் மரபு என கூறியது.
இந்நிலையில், இன்று சட்டசபைக்கு வந்த இரண்டு எம்.எல்.ஏ.,க்களும் கையில் பதாகையை ஏந்தியபடி சபை வளாகத்தில் உள்ள படிக்கட்டில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.
அந்த பதாகையில், தேர்தலில் வெற்றி பெற்ற மக்கள் பிரதிநிதிகளான எங்களின் கடமையை நிறைவேற்ற கவர்னர் அனுமதிக்க வேண்டும் என எழுதப்பட்டிருந்தது.