பொம்மைகளா நாங்கள்: பொரிந்து தள்ளிய திரிணாமுல் எம்.பி.,
பொம்மைகளா நாங்கள்: பொரிந்து தள்ளிய திரிணாமுல் எம்.பி.,
ADDED : ஆக 16, 2024 08:21 AM

கோல்கட்டா: மேற்கு வங்கத்தில் பெண் டாக்டர் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவம் குறித்து பா.ஜ.,வின் குற்றச்சாட்டுக்கு ஆளும் திரிணாமுல் காங்., எம்.பி., மஹுவா மொய்த்ரா விளக்கம் கொடுத்துள்ளார்.
பெண் டாக்டர் பலாத்காரம்
மேற்கு வங்க மாநிலம் தலைநகர் கொல்கத்தாவில் ஆர்.ஜி., கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த 8ம் தேதி இரவு பணியில் ஈடுபட்டிருந்த முதுநிலை மருத்துவ மாணவி ஒருவர் மறுநாள் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.
பிரேத பரிசோதனையில், இளம்பெண் டாக்டர் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.
குற்றச்சாட்டு
இந்த சம்பவத்தை தொடர்ந்து ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். பெண் டாக்டர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து வாய் திறக்காமல், திரிணாமுல் காங்., எம்.பி.,க்கள் வாய்மூடிய பொம்மைகளாக இருக்கின்றனர் என்று பா.ஜ., குற்றம்சாட்டியது.
வீடியோ
இதற்கு கிருஷ்ணாநகர் எம்.பி., மஹுவா மொய்த்ரா வீடியோ வெளியிட்டு பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறியதாவது:- இளம்பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவத்தின் போது, முதல்வர் மம்தா பானர்ஜி, ஜார்கிராம் - மெதினிபூரில் இருந்தார். உடனே மருத்துவர்களை தொடர்பு கொண்டு, சம்பவம் தொடர்பு கொண்டு பேசினார். மேலும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடமும் பேசினார்.
அவர் கோல்கட்டா திரும்பிய உடன் அவர்களை நேரில் சென்று சந்தித்தார். சி.சி.டி.வி., காட்சிகளின் அடிப்படையில் முக்கிய குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் துளியும் தாமதிக்காமல், வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்றம் செய்து முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டார். நாங்கள் ஒன்றும் வாய்மூடிய பொம்மைகள் அல்ல.
ஒரே பெண் முதல்வர்
இந்த சம்பவத்தில் நாங்கள் எதையும் மூடி மறைக்கவில்லை. இந்தியாவிலேயே ஒரே ஒரு பெண் முதல்வர் மம்தா பானர்ஜி தான். எனவே, பெண்களின் பிரச்னை குறித்து அவருக்கு நன்கு தெரியும், எனக் கூறினார்.

