ADDED : பிப் 16, 2025 08:15 AM

புதுடில்லி: ஆம் ஆத்மியைச் சேர்ந்த 3 டில்லி மாநகராட்சி கவுன்சிலர்கள் பா.ஜ.,விற்கு தாவி உள்ளனர். இதன் காரணமாக, அம்மாநகராட்சியையும் பா.ஜ., கைப்பற்றும் சூழல் ஏற்பட்டு உள்ளது.
சமீபத்தில் நடந்த டில்லி சட்டசபை தேர்தலில், பா.ஜ., 48 தொகுதிகளில் வெற்றி பெற்று, விரைவில் ஆட்சி அமைக்க உள்ளது. இதனையடுத்து தற்போது ஆம் ஆத்மி வசமிருக்கும் டில்லி மாநகராட்சியில் அக்கட்சி கவுன்சிலர்கள் பா.ஜ.,விற்கு தாவ துவங்கி உள்ளனர்.
கடந்த ஜன.,28 ல் ராம் சந்தர் என்ற ஆம் ஆத்மி கவுன்சிலர் பா.ஜ.,விற்கு தாவினார். இதனைத் தொடர்ந்து, அனிதா போசய்யா, நிகில் சப்ரானா, தரம்வீர் சிங் ஆகியோரும் பா.ஜ.,விற்கு தாவி உள்ளனர். இதனையடுத்து மொத்தம் 250 கவுன்சிலர்களை கொண்ட மாநகராட்சியில் பா.ஜ.,வின் பலம் 116 ஆக அதிகரித்து உள்ளது.
250 கவுன்சிலர் பதவிகளில் 22 கவுன்சிலர்கள் எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ., தேர்தலில் போட்டியிட்டதால் பதவியை ராஜினாமா செய்தனர். இதனால் அவை காலியாக உள்ளது. டில்லி மாநகராட்சி சட்டப்படி, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் மேயர் தேர்தல் நடக்கும். இத்தேர்தலுக்கு முன்னர் காலியாக உள்ள கவுன்சிலர் பதவிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்பது கட்டாயம் கிடையாது.
இதனால், மேயர் தேர்தல் நடக்கும் ஏப்ரல் மாதம் வரை, இப்பதவிகளுக்கு இடைத்தேர்தல் நடக்காவிட்டால், மேயர் பதவியை பா.ஜ.,கைப்பற்றுவதற்கான வாய்ப்பு உள்ளது. பா.ஜ., கவுன்சிலர்கள் கட்சி மாறி ஓட்டுப்போட்டாலும், காங்கிரஸ் ஆம் ஆத்மிக்கு ஆதரவு அளித்தால் மட்டுமே பா.ஜ., கவுன்சிலர் மேயர் ஆவது தடைபடும். ஆனால், இதற்கு சாத்தியம் மிகக்குறைவு. டில்லி மாநகராட்சியில் கட்சி தாவல் சட்டம் பொருந்தாது.
டில்லி மாநகராட்சி மேயர் தேர்தலில் 250 கவுன்சிலர்களுடன் 7 லோக்சபா எம்.பி.,க்கள், 3 ராஜ்யசபா எம்.பி.,க்கள் மற்றும் சபாநாயர் தேர்வு செய்யும் 14 எம்.எல்.ஏ.,க்கள் ஆகியோர் ஓட்டுப்போட தகுதி பெற்றுள்ளனர்.