ஓடும் ரயிலில் மனைவிக்கு ‛‛முத்தலாக்'' சொல்லிவிட்டு ஓடிய கணவன்
ஓடும் ரயிலில் மனைவிக்கு ‛‛முத்தலாக்'' சொல்லிவிட்டு ஓடிய கணவன்
ADDED : மே 03, 2024 11:23 AM

லக்னோ: உ.பி.,யில் ஓடும் ரயிலில் மனைவிக்கு முத்தலாக் சொல்லியதுடன், அவரை கடுமையாக தாக்கிவிட்டு தப்பித்த கணவனை போலீசார் தேடி வருகின்றனர்.
உ.பி., மாநிலம் கான்பூரின் புக்ரயான் பகுதியைச் சேர்ந்தவர் முகமது அர்ஷத்(28). ம.பி., மாநிலம் போபாலில் கம்ப்யூட்டர் பொறியாளர் ஆக பணியாற்றி வருகிறார். இவருக்கும் ராஜஸ்தானின் கோட்லாவைச் சேர்ந்த அப்சனா(26) என்பவருக்கும் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த பிறகு கணவன் வீட்டிற்கு அப்சனா சென்ற போது, முகமது அர்ஷத் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பது தெரியவந்தது.
அதிர்ச்சி அடைந்த அப்சனா கேள்வி எழுப்பினார். இதனால் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. மேலும், முகமது அர்ஷத்தும், அவரது தாயாரும் சேர்ந்து அப்சனாவை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்தனர்.
இந்நிலையில் புக்ரயானில் இருந்து ஜான்சி பகுதிக்கு ரயிலில் இருவரும் பயணித்தனர். அப்போது கணவன் மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனையடுத்து, ரயில் ஜான்சியை நெருங்கிய நிலையில், அப்சனாவிற்கு முத்தலாக் சொன்னதுடன், அங்கேயே கடுமையாக தாக்கிவிட்டு முகமது அர்ஷத் தலைமறைவானார்.
செய்வது அறியாமல் தடுமாறிய அப்சனா, ரயில்வே போலீசாரை உதவிக்கு அழைத்தார். அவர்கள், இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்ததுடன், அப்சனாவை பத்திரமாக புக்ரயான் பகுதிக்கு அனுப்பி வைத்தனர். தப்பியோடிய முகமது அர்ஷத்தை தேடி வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட அப்சனா, உதவி கேட்டு உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கு வேண்டுகோள் வைத்துள்ளார்.