திரிபுராவில் வெள்ளம்: வீடுகளை இழந்த குடும்பத்தினர் முகாம்களில் தஞ்சம்
திரிபுராவில் வெள்ளம்: வீடுகளை இழந்த குடும்பத்தினர் முகாம்களில் தஞ்சம்
ADDED : ஜூலை 09, 2025 04:53 PM

அகர்தலா: திரிபுரா மாநிலத்தில் கனமழை, வெள்ளத்தால் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வீடுகளை இழந்து முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
இந்திய வானிலை மையம், திரிபுரா மாநிலத்தில் உள்ள தெற்கு திரிபுரா மாவட்டத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், கோமதி மற்றும் செபாஹிஜாலா மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுத்து இருந்தது. இதையடுத்து மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது.எனினும் நேற்று பெய்த அதிகப்படியான மழை காரணமாக நுாற்றுக்கும் மேலான குடும்பத்தினருடைய வீடுகளை வெள்ளம் மூழ்கடித்தது.
இது தொடர்பாக மாவட்ட நிர்வாக அதிகாரிகள் கூறியதாவது:
கன மழை மற்றும் வெள்ளத்தால் திரிபுராவின் பல பகுதிகளில் 100 க்கும் மேலான குடும்பங்களின் வீடுகள் சேதமடைந்தன. வீடுகளை இழந்தவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு தப்பிச் செல்ல வேண்டியதாயிற்று. நேற்று பெய்த தொடர் மழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கை அடுத்து, தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு
கேட்டுக்கொண்டுள்ளோம்.
முஹுரி ஆற்றின் நீர்மட்டம் அபாய அளவை (15.70 மீட்டர்) தாண்டி ஓடிக்கொண்டிருந்ததால், கரையின் இருபுறமும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
திங்கட்கிழமை இரவு முதல் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக, பெலோனியா மற்றும் சாந்திர்பஜார் துணைப்பிரிவுகளில் உள்ள பல தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. 118 குடும்பங்களைச் சேர்ந்த 289 பேர் 10 நிவாரண முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
திரிபுரா முதல்வர் மாணிக் சஹா, மாவட்டத்தின் சமீபத்திய வெள்ள நிலைமை குறித்து விசாரித்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளையும் எடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

