திரிபுரா உள்ளாட்சி தேர்தல்: 97 சதவீத இடங்களில் பா.ஜ., வெற்றி
திரிபுரா உள்ளாட்சி தேர்தல்: 97 சதவீத இடங்களில் பா.ஜ., வெற்றி
ADDED : ஆக 15, 2024 04:24 AM

அகர்தலா : திரிபுராவில் நடந்த உள்ளாட்சி தேர்தலில், ஆளும் பா.ஜ., 97 சதவீத இடங்களில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.
வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் முதல்வர் மாணிக் சாஹா தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள உள்ளாட்சி பதவிகளுக்கு கடந்த 8ல் தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது. அதில், 71 சதவீத இடங்களில் எதிர்க்கட்சிகளான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் ஆகியவை வேட்பாளரை நிறுத்தப்போவதில்லை என அறிவித்தன. தேர்தலில் வெற்றி பெற ஆளும் பா.ஜ., மோசமான வழிமுறைகளை பின்பற்றுவதால், இந்த முடிவை எடுத்ததாக தெரிவித்திருந்தன.
அந்த இடங்கள் அனைத்திலும் பா.ஜ., வேட்பாளர்கள் போட்டியின்றி வென்றனர். மீதமுள்ள 29 சதவீத இடங்களுக்கு தேர்தல் நடந்தது. அதன் முடிவு சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதில், தேர்தல் நடந்த 606 கிராம பஞ்சாயத்துகளில் 584லும், 35 ஊராட்சி ஒன்றியங்களில் 34லும், எட்டு மாவட்ட ஊராட்சிகளில் அனைத்திலும் பா.ஜ., வெற்றி பெற்றுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் மற்றும் திரிபுரா மோத்தா ஆகிய கட்சிகள் சொற்பமான இடங்களை மட்டுமே பெற்றுள்ளன.