திரிவேணி சங்கமம் குளிக்க உகந்ததாக இல்லை': தேசிய மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை
திரிவேணி சங்கமம் குளிக்க உகந்ததாக இல்லை': தேசிய மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை
UPDATED : பிப் 19, 2025 06:22 AM
ADDED : பிப் 19, 2025 12:55 AM

புதுடில்லி, 'மஹா கும்பமேளா நடக்கும் திரிவேணி சங்கமத்தில் உள்ள நீர் மாசடைந்துள்ளதால், குளிப்பதற்கு உகந்ததாக இல்லை' என, மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில், கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகள் கூடும் திரிவேணி சங்கமத்தில், கடந்த மாதம் 13ம் தேதி மஹா கும்பமேளா துவங்கியது. இது, வரும் 26ம் தேதி நிறைவடைகிறது. இதையொட்டி, பல்வேறு மாநிலங்களில் இருந்து மட்டுமின்றி, வெளிநாடுகளில் இருந்தும் கோடிக்கணக்கானோர் இங்கு புனிதநீராடி வருகின்றனர்.
மிகப்பெரிய ஆன்மிக நிகழ்வான இதில், இதுவரை 55 கோடிக்கும் மேற்பட்டோர் பங்கேற்று, புனித நீராடி வழிபட்டுள்ளனர். முன்னதாக, கங்கை மற்றும் யமுனை நதிகளில் கழிவுநீர் கலப்பதை தடுக்கக்கோரிய மனுக்களை, தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தலைவர் நீதிபதி பிரகாஷ் ஸ்ரீவஸ்தவா தலைமையிலான அமர்வு சமீபத்தில் விசாரித்தது.
அப்போது, கங்கை மற்றும் யமுனை நதிகளில் உள்ள நீரின் தரம் குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யும்படி, தேசிய மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு அந்த அமர்வு உத்தரவிட்டது.
இதன்படி, மஹா கும்பமேளா நடக்கும் பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தின் ஒரு சில பகுதிகளில் உள்ள நீரின் மாதிரிகளை எடுத்து, தேசிய மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வுக்கு உட்படுத்தியது. இந்த ஆய்வு முடிவுகளை கடந்த 3ம் தேதி, தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் அந்த அமைப்பு தாக்கல் செய்தது.
அதன் விபரம்:
திரிவேணி சங்கமத்தில் எடுக்கப்பட்ட நீரின் மாதிரிகளை ஆய்வுக்கு உட்படுத்தியதில், அது குளிப்பதற்கு உகந்தது அல்ல என்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த நீரில், 'பேக்கல் கோலிபார்ம்' என்ற பாக்டீரியா தொற்று அதிகளவில் இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
மஹா கும்பமேளா நிகழ்வு 1 மாதத்திற்கு மேல் நீடித்து வந்தாலும், மகா பவுர்ணமி போன்ற முக்கிய நாட்களில் அதிக எண்ணிக்கையிலான பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர். அப்போது, மனித கழிவுகள் அதிகளவில் நீரில் கலந்திருப்பதாகவும், இதன் காரணமாக, அவற்றின் வழியே பரவும் பேக்கல் கோலிபார்ம் என்ற பாக்டீரியா தொற்று இருப்பதால், அந்த நீர் மாசடைந்துள்ளது.
இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையை பதிவு செய்து கொண்ட தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் அமர்வு, உத்தர பிரதேச அரசும், மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியமும் ஆய்வு செய்து விரிவான நடவடிக்கை எடுக்கும்படியும் உத்தரவிட்டது.

