டில்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு சிக்கல்!: மேலும் ஒரு வழக்கிலும் சம்மன்
டில்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு சிக்கல்!: மேலும் ஒரு வழக்கிலும் சம்மன்
ADDED : மார் 18, 2024 12:06 AM

புதுடில்லி: டில்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஏற்கனவே சிக்கியுள்ள அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, டில்லி குடிநீர் வாரிய முறைகேடு வழக்கிலும், அமலாக்கத் துறையினர் 'சம்மன்' அனுப்பி உள்ளனர்.
டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது.
இங்கு மதுபான தயாரிப்பு, வினியோகம் மற்றும் விற்பனையில், 2021 - 22ம் ஆண்டு புதிய கொள்கை வகுக்கப்பட்டது.
இதில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்த நிலையில், சி.பி.ஐ., இது குறித்து விசாரித்து வருகிறது. இதில் நடந்த சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
எட்டு முறை சம்மன்
இது தொடர்பாக, டில்லி ஆம் ஆத்மி அரசில் துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியா உள்ளிட்ட 12 பேர் கைது செய்யப்பட்டனர்.
சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில், தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதாவை, சமீபத்தில் அமலாக்கத்துறையினர் கைது செய்தனர்.
முன்னதாக இவ்வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும்படி, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, அமலாக்கத்துறை எட்டு முறை சம்மன் அனுப்பியது. ஆனால், கெஜ்ரிவால் அவற்றை நிராகரித்தார்.
இதையடுத்து, டில்லி நீதிமன்றத்தில் கெஜ்ரிவாலுக்கு எதிராக அமலாக்கத்துறை வழக்கு தொடுத்தது. இவ்வழக்கில் ஆஜரான அவருக்கு நீதிமன்றம் ஜாமின் அளித்தது.
இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணைக்கு வரும் 21ம் தேதி ஆஜராகும்படி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஒன்பதாவது முறையாக அமலாக்கத்துறை நேற்று சம்மன் அனுப்பியது.
இதேபோல், டில்லி குடிநீர் வாரியத்தின் ஒப்பந்தம், தனியார் நிறுவனத்திற்கு வழங்கியதில் முறைகேடு நடந்ததாக சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்தது.
இதுதொடர்பாக வாரியத்தின் முன்னாள் தலைமை இன்ஜினியர் ஜகதீஷ் குமார் அரோரா, ஒப்பந்ததாரர் அனில் குமார் அகர்வால் ஆகியோர், ஜன., 31ல் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கின் அடிப்படையில், இதில் நடந்துள்ள பண மோசடி தொடர்பாக அமலாக்கத் துறையும் விசாரணையை துவக்கியது.
சோதனை
இது தொடர்பாக, முதல்வர் கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார், டில்லி குடிநீர் வாரிய முன்னாள் உறுப்பினர் சலாப் குமார் உட்பட பலரின் வீடுகளில் கடந்த மாதம் சோதனை நடத்தப்பட்டது.
இச்சோதனையில், 1.97 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் மற்றும் நான்கு லட்சம் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகள் கைப்பற்றப்பட்டன.
இதைத்தொடர்ந்து அமலாக்கத்துறை நடத்திய விசாரணையில், குடிநீர் வாரியத்தின் ஒப்பந்தம் தனியார் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டதற்கு பிரதிபலனாக, அந்நிறுவனம் சார்பில் குடிநீர் வாரியத்தின் முன்னாள் தலைமை இன்ஜினியர் ஜெகதீஷ் குமார் அரோராவுக்கு ஊழல் பணம் வழங்கப்பட்டது தெரியவந்தது.
இந்த ஊழல் பணம், பல்வேறு நபர்களின் வாயிலாக, ஆம் ஆத்மியுடன் தொடர்புடைய நபர்களுக்கு சென்றடைந்தது.
இதையடுத்து, அப்பணத்தை தேர்தல் நிதிக்கு அக்கட்சி பயன்படுத்தி உள்ளதையும் கண்டறிந்தது.
இந்நிலையில் டில்லி குடிநீர் வாரியத்தில் நடந்த முறைகேடான ஒப்பந்தங்கள் வாயிலாக பெறப்பட்ட ஊழல் பணம், ஆம் ஆத்மியின் தேர்தல் நிதியாகச் சென்றது குறித்து விசாரணை நடத்த இன்று ஆஜராகுமாறு, கெஜ்ரிவாலுக்கு தனியாக மற்றொரு சம்மனும் அமலாக்கத்துறை அனுப்பி உள்ளது.
லோக்சபா தேர்தல் நெருங்கும் நேரத்தில் அமலாக்கத்துறையின் இந்த சம்மன், ஆம் ஆத்மி கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.
சிறையில் அடைக்க திட்டம்!
லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில், அமலாக்கத்துறை, சி.பி.ஐ., அமைப்புகளை பயன்படுத்தி, மத்தியில் ஆளும் பா.ஜ., எதிர்க்கட்சியினரை அச்சுறுத்தி வருகிறது. தற்போது, ஆம் ஆத்மி தலைவர் கெஜ்ரிவால் மீது பொய் குற்றச்சாட்டு களை எழுப்பி, சிறையில் அடைக்க பா.ஜ., அரசு திட்டமிட்டுள்ளது.
ஆதிஷி
டில்லி கல்வி அமைச்சர், ஆம் ஆத்மி
தப்பித்து ஓட முயற்சி!
சட்ட விதிகளுக்கு உட்பட்டே கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. ஆனால், சட்டத்தின் பிடியில் இருந்து தப்பித்து ஓட கெஜ்ரிவால் முயற்சிக்கிறார். எனினும், அமலாக்கத் துறையின் விசாரணைக்கு அவர் பதிலளித்தாக வேண்டும்.
ஹரீஷ் குரானா
மூத்த தலைவர், பா.ஜ.,

