ADDED : ஏப் 14, 2025 04:00 AM

போபால் : மத்திய பிரதேசத்தில், கோடை வெப்பத்தில் தவித்த சிவிங்கி புலிகளுக்கு தண்ணீர் வைத்ததால், ம.பி.,யில் உள்ள குனோ தேசிய பூங்கா டிரைவரின் வேலைக்கு சிக்கல் ஏற்பட்டது.
மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில், 'குனோ தேசிய உயிரியல் பூங்கா' என்ற வன விலங்குகள் சரணாலயம் உள்ளது. நம் நாட்டில் சிவிங்கி புலிகள் இனம் குறைந்து விட்டதாக கூறப்படும் நிலையில், 2022-ல் இந்த பூங்காவுக்கு நமீபிய சிவிங்கி புலிகள் கொண்டு வரப்பட்டன. பிரதமர் நரேந்திர மோடி, இவற்றை பூங்காவுக்கு வழங்கினார். தற்போது, இந்த சிவிங்கி புலிகளுக்கு தண்ணீர் கொடுத்த ஒருவர், சர்ச்சையில் சிக்கி உள்ளார்.
குனோ பூங்காவில் டிரைவராக வேலை பார்க்கும் சத்ய நாராயண் குர்ஜார் என்பவர், பிளாஸ்டிக் கேனில் தண்ணீரை எடுத்துச் சென்று, பெரிய உலோக பாத்திரத்தில் அதை நிரப்பி, மரத்தின் அடியில் வைத்துள்ளார். பூங்காவில் இருக்கும் 'ஜுவாலா' என பெயரிடப்பட்ட பெண் சிவிங்கி புலியும், அதன் குட்டிகளும் அந்த தண்ணீரை குடித்தன. சத்ய நாராயண் தண்ணீர் வைத்த இந்த வீடியோ, உலக அளவில் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.
தாகத்தால் தவித்த சிவிங்கி புலிகளுக்கு துணிச்சலுடன் தண்ணீர் வைத்ததாக இணையவாசிகள் அவருக்கு பாராட்டு தெரிவித்தனர். கோடை வெயிலில் தவிக்கும் விலங்குகளுக்கு சிறியதாக குளம் போன்று அமைத்து தண்ணீரை வைக்கலாம் என்றும், சிலர் யோசனை தெரிவித்தனர். ஆனால், தண்ணீர் கொடுத்த சத்ய நாராயணுக்கோ நெருக்கடிகள் ஏற்பட்டன. குனோ பூங்காவில், விலங்குகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவுவதாக விமர்சனங்கள் எழுந்தன.
பூங்கா விதிகளின்படி, அவர் தவறு செய்து விட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டது. சிறுத்தை, புலி, சிங்கம் உள்ளிட்ட விலங்குகளின் அருகில், அவற்றின் பராமரிப்புக்காக நியமிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ பணியாளர்கள் மட்டுமே செல்ல வேண்டும்;. அதற்கு மாறாக, சிவிங்கி புலிகளின் அருகே சத்ய நாராயண் சென்றதால் அவரை பணிநீக்கம் செய்து, பூங்கா நிர்வாகம் உத்தரவிட்டது.
இதையடுத்து, 'இளகிய மனம், இரக்க குணம் கொண்டவருக்கு தண்டனையா?' என, ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், அவர் மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டார்.