UPDATED : ஜன 03, 2024 10:43 AM
ADDED : ஜன 03, 2024 01:42 AM

புதுடில்லி: சாலை விபத்துகளை ஏற்படுத்திவிட்டு தப்பி ஓடும் வாகன ஓட்டுனர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கும் புதிய குற்றவியல் சட்டத்துக்கு எதிராக, பல்வேறு மாநிலங்களை சேர்ந்த லாரி ஓட்டுனர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசுடன் நடந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து, போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது.
ஆங்கிலேயர் காலத்தில் இயற்றப்பட்ட இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம் மற்றும் இந்திய சாட்சியங்கள் சட்டங்களில் இன்றைய காலகட்டத்துக்கு ஏற்றது போல் பல்வேறு சீர்திருத்தங்களை மத்திய அரசு மேற்கொண்டது.
இந்த புதிய குற்றவியல் சட்டங்களுக்கு, 'பாரதிய நாகரிக் சுரக் ஷா சன்ஹிதா, பாரதிய சாக் ஷ்ய அதிநியம், பாரதிய நியாய சன்ஹிதா' என, ஹிந்தியில் பெயர் மாற்றம் செய்யப்பட்டன. இந்த மூன்று புதிய குற்றவியல் சட்ட திருத்த மசோதாக்களும் பார்லி.,யின் இரு சபைகளிலும் நிறைவேற்றப்பட்டு, ஜனாதிபதி ஒப்புதலும் அளிக்கப்பட்டது.
இதில், பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தில் வாகன விபத்து தொடர்பான சட்ட திருத்தம் இடம் பெற்றுள்ளது. அதில், சாலை விபத்துகளை ஏற்படுத்திவிட்டு தப்பி ஓடும் ஓட்டுனர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், 7 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கும் வகையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜம்மு - காஷ்மீர், ஹிமாச்சல பிரதேசம், பஞ்சாப், மஹாராஷ்டிரா, பீஹார், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் லாரி, பஸ் மற்றும் கார் ஓட்டுனர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். டேங்கர் லாரி ஓட்டுனர்களும் போராட்டத்தில் ஈடுபட்டதால், பெட்ரோல், டீசல் வினியோகம் பாதிக்கப்படும் என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் எழுந்தது.
இதனால், பெட்ரோல் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோத துவங்கின.
மத்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், 'விபத்தை ஏற்படுத்தும் ஓட்டுனர்கள் பாதிக்கப்படும் நபரை மருத்துவமனையில் அனுமதித்தாலோ அல்லது விபத்து குறித்து போலீசுக்கு தகவல் அளித்தாலோ, சம்பந்தப்பட்ட ஓட்டுனர் மீது கடும் நடவடிக்கை பாயாது' என்றார்.