தொழிலதிபர்கள் மஸ்க், விவேக் தலைமையில் அரசின் நிர்வாக சீரமைப்புக்கு தனி துறை அமெரிக்க அதிபர் தேர்வு டிரம்ப் அறிவிப்பு
தொழிலதிபர்கள் மஸ்க், விவேக் தலைமையில் அரசின் நிர்வாக சீரமைப்புக்கு தனி துறை அமெரிக்க அதிபர் தேர்வு டிரம்ப் அறிவிப்பு
ADDED : நவ 14, 2024 03:09 AM

வாஷிங்டன் : அரசு நிர்வாகத்தை சீரமைக்கவும், தேவையற்ற செலவுகளை குறைக்கவும் ஆலோசனை வழங்குவதற்காக, தொழிலதிபர்கள் எலான் மஸ்க், விவேக் ராமசாமி தலைமையில் தனி துறையை, அமெரிக்க அதிபராக தேர்வாகியுள்ள டொனால்டு டிரம்ப் நேற்று அறிவித்தார்.
அமெரிக்காவில் சமீபத்தில் நடந்த தேர்தலில், டொனால்டு டிரம்ப் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அடுத்தாண்டு ஜனவரி 20ல் அவர் பதவியேற்க உள்ளார். இந்நிலையில், டிரம்ப் தலைமையிலான நிர்வாகத்தில் இடம்பெற உள்ளோர் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன.
அதிபர் தேர்தல் பிரசாரத்தின்போது, அரசு நிர்வாகத்தை சீரமைக்க, டி.ஓ.ஜி.இ., எனப்படும் அரசு செயல்திறன் துறை உருவாக்கப்படும் என, டிரம்ப் பலமுறை கூறியிருந்தார். அதன்படி, தன் புதிய அரசில், அரசு நிர்வாக சீரமைப்புக்காக தனி துறை உருவாக்குவதாகவும், தொழிலதிபர்கள் எலான் மஸ்க், இந்திய வம்சாவளியான விவேக் ராமசாமி தலைமையில் இது இயங்கும் என, டிரம்ப் நேற்று அறிவித்தார்.
இது குறித்து, டொனால்டு டிரம்ப் நேற்று வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டு உள்ளதாவது:
அமெரிக்க அரசின் நிர்வாகத் திறன்களை மேம்படுத்தவும், அமெரிக்கர்களின் வாழ்க்கைத் திறனை சுலபமாக்கவும், அரசு செயல்திறன் துறை உருவாக்கப்படுகிறது. இந்த துறை, அரசு நிர்வாகத்தின் ஒரு பகுதியாக இல்லாமல், தனியாக இருக்கும். அரசு நிர்வாகத்தில் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தங்கள், தேவையற்ற செலவுகளை குறைப்பது, நடைமுறைக்கு தேவையில்லாத விதிகள், சட்டங்கள், கட்டுப்பாடுகளை குறைப்பது போன்றவற்றில் ஆலோசனை வழங்கும். அமெரிக்காவை காப்பாற்றுவோம் என்ற எங்களுடைய கோஷத்துக்கு வலு சேர்ப்பதாக இது இருக்கும்.
டெஸ்லா நிறுவனத்தின் தலைவரான பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க், இந்திய வம்சாவளியான பிரபல தொழிலதிபர் விவேக் ராமசாமி ஆகியோர், தங்களுடைய நிர்வாகத் திறன்களை பயன்படுத்தி, இந்த புதிய துறையின் வாயிலாக, நாட்டை வளப்படுத்த தேவையான ஆலோசனைகள் வழங்குவர்.
வரும் 2026 ஜூலை 4ம் தேதி, நாட்டின் சுதந்திரம் பிரகடனப்படுத்தியதன், 250வது ஆண்டை கொண்டாட உள்ளோம். அந்த நாளுக்குள், இந்த புதிய துறை தன் ஆலோசனைகளை வழங்கும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.