UPDATED : ஆக 10, 2025 07:21 AM
ADDED : ஆக 10, 2025 01:07 AM

புதுடில்லி: ரஷ்ய அதிபர் புடினுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் அடுத்தவாரம் நடத்தவுள்ள பேச்சுக்கு, நம் வெளியுறவுத்துறை வரவேற்பு தெரிவித்துள்ளது.
ரஷ்யா - உக்ரைன் இடையே கடந்த மூன்று ஆண்டுகளாக நடக்கும் போர், இன்னும் முடிவுக்கு வரவில்லை. இந்த நிலையில் உக்ரைன் உடனான மோதலை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்காவின் அலாஸ்காவில், வரும் 15ல் அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் புடின் ஆகியோர் பேச்சு நடத்த உள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்டது.
ரஷ்யாவின் இந்த முடிவுக்கு நம் வெளியுறவு அமைச்சகம் வரவேற்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக நம் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளார் ரன்தீர் ஜெய்ஸ்வால் நேற்று வெளியிட்ட அறிக்கை:
உக்ரைன் உடனான மோதலை முடிவுக்கு கொண்டு வர ஆக.,15ல் அமெரிக்காவின் அலாஸ்காவில் ரஷ்யா - அமெரிக்கா இடையே பேச்சு நடத்த முடிவு செய்யப்பட்டதை இந்தியா வரவேற்கிறது.
இந்த முடிவு, உக்ரைனில் நடந்து வரும் மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும் அமைதி திரும்புவதற்கும் உறுதியளிக்கிறது.
'இது போரின் சகாப்தம் அல்ல' என பிரதமர் மோடி பல சந்தர்ப்பங்களில் கூறியுள்ளார். இந்த பேச்சுக்கான அனைத்து உதவியையும் இந்தியா செய்யும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.