ஓவராக பேசும் டிரம்ப்; ஓட ஓட விரட்டுவாரா கமலா! செப்.,4ல் நேருக்கு நேர் மோதல்
ஓவராக பேசும் டிரம்ப்; ஓட ஓட விரட்டுவாரா கமலா! செப்.,4ல் நேருக்கு நேர் மோதல்
UPDATED : ஆக 03, 2024 05:49 PM
ADDED : ஆக 03, 2024 05:05 PM

வாஷிங்டன்: குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்டு டிரம்ப் வரும் செப்டம்பர் 4ம் தேதி தன்னை எதிர்த்து போட்டியிடும் கமலா ஹாரிஸ் உடன் நேரலையில் விவாதம் நடத்துகிறார்.
அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல், நவ., 5ல் நடக்க உள்ளது. இதில், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், 78, போட்டியிடுவது உறுதியாகி உள்ளது. அவரை எதிர்த்து, ஆளும் ஜனநாயக கட்சி சார்பில், அதிபர் ஜோ பைடன், 81, போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தேர்தல் விவாத நிகழ்ச்சியில் டிரம்பின் கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாமல் ஜோ பைடன் திணறினார். வேட்பாளரை மாற்ற கட்சியில் பல தலைவர்கள் போர்க்கொடி துாக்கினர்.
விவாதத்தில் வெற்றி யாருக்கு?
இதையடுத்து அதிபர் பதவிக்கான போட்டியில் இருந்து விலகுவதாக ஜோ பைடன் அறிவித்தார். துணை அதிபர் கமலா ஹாரிஸ், 59, ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக களமிறங்க உள்ளார். அவரை எளிதில் வெற்றி கொள்வேன் என தம்பட்டம் அடிக்கும் டிரம்ப், கமலாவை தாறுமாறாக விமர்சனம் செய்கிறார். 'இவ்வளவு காலம் இந்தியர் என்று கூறி வந்தவர், இப்போது கருப்பர் என தன்னை அடையாளப்படுத்துகிறார்' என்றும் கமலா பற்றி டிரம்ப் கூறியுள்ளார்.
நேரலை விவாதம்
இந்நிலையில், செப்டம்பர் 4ம் தேதி தன்னை எதிர்த்து போட்டியிடும் கமலா ஹாரிஸ் உடன் டிரம்ப் நேரலை விவாதம் நடத்துகிறார். பார்வையாளர்கள் முன்னிலையில் இந்த விவாதம் நடக்கிறது. பென்சில்வேனியாவில் நடக்கும் விவாதத்தில் பங்கேற்க டிரம்ப் மற்றும் கமலா ஹாரிஸ்க்கு அழைப்பு விடப்பட்டுள்ளது என பாக்ஸ் நியூஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. 'செப்.,4ல் கமலா ஹாரிஸை சந்தித்து விவாதிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்' என டிரம்ப் கூறியுள்ளார்.