நாளை முதல் சாந்தி யாகம்! சந்திரபாபு நாயுடு,தேவஸ்தான அதிகாரிகள் சீரியஸ் டிஸ்கஷன்
நாளை முதல் சாந்தி யாகம்! சந்திரபாபு நாயுடு,தேவஸ்தான அதிகாரிகள் சீரியஸ் டிஸ்கஷன்
ADDED : செப் 22, 2024 01:01 PM

திருப்பதி: திருப்பதி லட்டு பிரசாத சர்ச்சை வெடித்த நிலையில், பரிகார பூஜை நடத்துவது குறித்து முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடன் தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.
புகழ்பெற்ற பக்தர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்ற திருப்பதி கோயில் லட்டு பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பு, மீன் எண்ணெய் கலக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பூதாகரமாக எழுந்த இவ்விவகாரம் பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு, கோயிலின் புனிதம் கெட்டுவிட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
லட்டு விவகாரத்தில் அடுத்து என்ன செய்வது என்பது குறித்து திருப்பதி தேவஸ்தானத்தின் நிர்வாக அதிகாரி சியாமளா ராவ், கூடுதல் நிர்வாக அதிகாரி வெங்கையா சவுத்ரி உள்ளிட்டோருடன் முக்கிய ஆலோசனை நடத்தினார். இதன் முடிவில் நாளை முதல் 3 நாட்கள் சாந்தி யாகம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. மேலும், லட்டு தயாரிப்புக்கூடம், நெய் இருப்பு வைத்துள்ள இடங்களையும் சுத்தப்படுத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.
இந் நிலையில், முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடன் தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். திருப்பதி பிரம்மோற்சவத்துக்கு நேரில் அழைப்பு விடுத்த அவர்கள், பரிகார பூஜையான சாந்தி யாகத்தில் என்ன செய்வது? என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து விரிவாக பேசினர்.
முன்னதாக, லட்டு பிரச்னையால் வேதனை அடைந்துள்ளேன், திருப்பதிக்கு 11 நாள் விரதம் இருக்கிறேன் என்று துணை முதல்வர் பவன் கல்யாண் அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.