ADDED : ஜன 17, 2025 07:12 AM
துமகூரு: துமகூரில் பைக் உரிமையாளர்களுக்கு போலீஸ் எஸ்.பி., அறிவுரை வழங்கி உள்ளார்.
துமகூரு மாவட்டத்தில் பைக் திருட்டு சர்வ சாதாரணமாக நடந்து வருகிறது. இதனால் பைக் உரிமையாளர்கள் அச்சத்தில் உள்ளனர்.
கிராமப்புறங்களை விட நகர்ப்பகுதிகளில் அதிக எண்ணிக்கையில் பைக்குகள் திருடப்படுகின்றன. குறிப்பாக, சாலையோரம், பள்ளி, கல்லுாரி, பஸ் நிலையங்களில் நிறுத்தப்படும் பைக்குகள் கண் இமைக்கும் நேரத்தில் காணாமல் போகின்றன.
இரவில் வீட்டின் முன் நிறுத்தப்படும் பைக்குகள், காலையில் பார்க்கும் போது இருக்காது.
எஸ்.பி., -- கே.வி.அசோக் கூறியதாவது:
துமகூரில் கடந்த ஆண்டு மட்டும், 404 பைக்குகள் திருடப்பட்டு உள்ளன.
இதில், 259 பைக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு, உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
இந்த ஆண்டில், இதுவரை துமகூரு சிட்டி போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் 60 பைக்குகளும், சிரா போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் 49 பைக்குகளும் திருடு போய் உள்ளன.
கடந்த இரண்டு ஆண்டுகளில் சிரா பகுதியில் நடந்த சோதனையில் 75 பைக்குகள் மீட்கப்பட்டன.
நகரில் 312 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. இவை, குற்றவாளிகளை கண்டுபிடிக்க போலீசாருக்கு உதவியாக உள்ளது.
பைக் திருடர்களை கைது செய்து விசாரிக்கும் போது, பல உண்மைகள் வெளியில் வருகிறது. சமீபத்தில் பாவகடா, சிரா பகுதிகளில் வாகன திருட்டு கும்பல் கைது செய்யப்பட்டது.
வாகன ஓட்டிகள் தங்கள் பைக்குகளை பொது இடங்களில் நிறுத்தும் போது பாதுகாப்பான இடங்களில் நிறுத்த வேண்டும்.
சாவியை பைக்கில் வைத்துவிட்டு செல்ல கூடாது. வாகனங்களை அசைக்க முடியாத அளவு லாக்குகள் போடவும். 2023 ஐ விட, 2024ல் பைக் திருட்டுகள் குறைந்துள்ளன.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.