துங்கபத்ரா அணை மதகு உடைந்தது: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
துங்கபத்ரா அணை மதகு உடைந்தது: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
UPDATED : ஆக 11, 2024 05:14 PM
ADDED : ஆக 11, 2024 12:01 PM

பெங்களூரு : கர்நாடகாவில் உள்ள மிகப்பெரிய அணையான துங்கபத்ராவில் 19வது மதகின் செயின் லிங்க் திடீரென்று உடைந்தது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
தென் மேற்கு பருவமழை காரணமாக கர்நாடகா மாநிலத்தில் உள்ள அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. கொப்பல் மாவட்டத்தில் உள்ள துங்கபத்ரா அணையும் நிரம்பியதை தொடர்ந்து நீர் திறக்கப்பட்டு உள்ளது.
70 ஆண்டு பழமையான இந்த அணையில் 33 மதகுகள் உள்ளன. நேற்று இரவு 11 மணியளவில் 19 வது மதகின் செயின்லிங்க் திடீரென உடைந்தது. இதனால் 19வது மதகு முழுவதும் தண்ணீர் வெளியேறி வருகிறது. அணையில் இருந்து 1 லட்சம் கன அடி வீதம் தண்ணீர் வெளியேறுகிறது. வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட மதகு வழியாக 33 ஆயிரம் கன அடி நீர் வெளியேறுகிறது. ஆற்றங்கரையோரம் உள்ள பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
அண்டை மாநிலமான ஆந்திராவிலும் கிருஷ்ணா நதிக்கரையோர மக்களும் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
1970ல் கட்டப்பட்ட இந்த அணையில் 105 டிஎம்சி தண்ணீர் தேக்க முடியும். குறைந்தபட்சம் 60 முதல் 65 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட்டால் தான் உடைந்த மதகை சரி செய்ய முடியும் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

