பாக்.,கிற்கு ட்ரோன்கள் மட்டுமல்ல ஆட்களையும் அனுப்பியது துருக்கி
பாக்.,கிற்கு ட்ரோன்கள் மட்டுமல்ல ஆட்களையும் அனுப்பியது துருக்கி
ADDED : மே 15, 2025 12:15 AM
புதுடில்லி: ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, கடந்த 7ல், பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளின் ஒன்பது முகாம்களை நம் ராணுவத்தினர் அழித்தனர்.
இதையடுத்து, பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக, எல்லையில் உள்ள ஜம்மு - காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் குஜராத்தை நோக்கி, 300க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை வீசி பாக்., தாக்கியது. இவற்றை நம் ராணுவத்தினர் இடைமறித்து அழித்தனர்.
தாக்குதலுக்கு பாக்., பயன்படுத்திய ட்ரோன்களின் பாகங்களை சேகரித்து, நம் பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
அந்த ட்ரோன்கள், மேற்காசிய நாடான துருக்கியின், 'அசிஸ்கார்டு சோங்கர்' ரகத்தைச் சேர்ந்தவை என்பது தெரிய வந்தது. இதன் வாயிலாக, நம் நாட்டின் மீது தாக்குதல் நடத்த பாகிஸ்தானுக்கு துருக்கி உதவியது அம்பலமானது.
இந்நிலையில், நம் நாட்டின் ராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்த, பாகிஸ்தானுக்கு 300க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மட்டுமின்றி, அவற்றை இயக்க இரண்டு ஆப்பரேட்டர்களையும் துருக்கி அனுப்பி வைத்தது, தற்போது தெரிய வந்துள்ளது.
நம் நாட்டின் மீதான ட்ரோன் தாக்குதல்களை ஒருங்கிணைக்கும் பணியை, இந்த ஆப்பரேட்டர்கள் மேற்கொண்டதாகவும், 'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கையின்போது அவர்கள் கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
கடந்த சில ஆண்டுகளாக, பாக்., - துருக்கி இடையே ராணுவ உறவு வளர்ச்சி அடைந்து வருகிறது. பாகிஸ்தானுக்கு ராணுவ உபகரணங்கள் வழங்குவதுடன், அந்நாட்டின் ராணுவ வீரர்களுக்கு துருக்கி பயிற்சியும் அளித்து வருகிறது.