இந்திய விமான நிலையங்களில் செயல்பட்ட துருக்கி நிறுவனம்: அனுமதியை ரத்து செய்தது மத்திய அரசு
இந்திய விமான நிலையங்களில் செயல்பட்ட துருக்கி நிறுவனம்: அனுமதியை ரத்து செய்தது மத்திய அரசு
UPDATED : மே 15, 2025 09:58 PM
ADDED : மே 15, 2025 07:36 PM

புதுடில்லி: டில்லி உள்ளிட்ட 9 விமான நிலையங்களில் பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வந்த துருக்கி நிறுவனத்திற்கான பாதுகாப்பு அனுமதியை மத்திய அரசு ரத்து செய்தது.
இந்தியா எவ்வளவு உதவி செய்தாலும், அதனை மதிக்காமல் துருக்கி எப்போதும் பாகிஸ்தானுக்கு ஆதரவான நிலைப்பாட்டையே எடுத்து வருகிறது. சமீபத்தில் நடந்த மோதலின் போது கூட பாகிஸ்தானுக்கு ட்ரோன்களை வழங்கியதுடன், அதனை இயக்குவதற்கு பணியாளர்களையும் துருக்கி அனுப்பி வைத்தது. துருக்கியில் தயாரிக்கப்பட்ட ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டதை நமது ராணுவத்தினர் உறுதி செய்துள்ளனர்.
இது இந்தியர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தி உள்ளது. அந்நாட்டுடனான ஒப்பந்தத்தை இந்திய கல்வி நிறுவனங்கள் ரத்து செய்து வருகின்றன. சுற்றுலா செல்வோரின் எண்ணிக்கையும் குறைந்து உள்ளது.
இந்நிலையில் இந்தியாவில் டில்லி உள்ளிட்ட 9 விமான நிலையங்களில் முக்கியமான சில பணிகளை துருக்கியைச் சேர்ந்த செலிபி நிறுவனம், இந்திய அரசின் அனுமதியுடன் செயல்படுத்தி வந்தது.
பாகிஸ்தானுக்கு ஆதரவான நிலைப்பாட்டை துருக்கி எடுத்ததால், தேசத்தின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அந்நாட்டைச் சேர்ந்த செலிபி நிறுவனத்தின் அனுமதியை ரத்து செய்வது குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்துவந்தது.
இந்நிலையில், மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் மாலை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது; '' நாட்டின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, செலிபி நிறுவனத்திற்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பு ஒப்புதலை உடனடியாக திரும்ப பெறுகிறோம்,'' எனத் தெரிவித்துள்ளது.
நிறுவனத்தின் பணிகள்
இந்த செலிபி நிறுவனம் இரண்டு குழுக்களாக இந்தியாவில் செயல்படுகிறது. செலிபி இந்திய விமான சேவைகள் என்று நிறுவனம் மூலம் விமானங்கள் தரையிறங்குவது தொடர்பான பணி நடந்து வந்தன.
டில்லி சரக்கு முனைய நிர்வாக இந்தியா என்ற நிறுவனம் மூலம் டில்லி சர்வதேச விமான நிலையத்தில் சரக்குகளை கையாளும் பணி நடந்தது.
இவற்றில் சாய்வு தள சேவைகள், விமானம் சுமுகமாக பயணம் செய்யும் வகையில் எடை மேலாண்மை மற்றும் விமான செயல்பாடுகள், விமானத்தில் ஏற உதவும் வாகனங்கள், சரக்கு, அஞ்சல் சேவை மற்றும் கிடங்கு மேலாண்மை உள்ளிட்ட பணிகளை இந்த நிறுவனம் செய்து வந்தது.
முடிவுக்கு வருகிறது
இந்நிலையில், அதானி விமான நிலைய ஹோல்டிங் நிறுவன அதிகாரி கூறியதாவது: விமான நிலையத்தில் ஓய்வறைகளுக்கான வசதியை வழங்கும் டிராகன்பாசுடனான எங்கள் உறவு முடிவுக்கு வருகிறது. டிராகன்பாஸ் வாடிக்கையாளர்கள் இனிமேல், அதானி நிர்வகிக்கும் விமான நிலையங்களில் ஓய்வறைகளை அணுக முடியாது. இந்த மாற்றம் விமான நிலைய ஓய்வறை மற்றும் பிற வாடிக்கையாளர்களின் பயண அனுபவத்தில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது எனக்கூறியுள்ளார்.