குளத்தில் காலை கழுவி 'டிவி' நடிகை ரீல்ஸ்: குருவாயூர் கோவிலில் 6 நாள் பரிகார பூஜை
குளத்தில் காலை கழுவி 'டிவி' நடிகை ரீல்ஸ்: குருவாயூர் கோவிலில் 6 நாள் பரிகார பூஜை
ADDED : ஆக 27, 2025 02:46 AM

திருச்சூர்: மலையாள, 'டிவி' நடிகையும், 'யு டியூப்' பி ரபலமுமான ஜாஸ்மின் ஜாபர் கேரளாவில் உள்ள குருவாயூர் கோவில் குளத்தில் காலை கழுவி, 'ரீல்ஸ்' எடுத்து பதிவிட்ட சம்பவம் சமூகவலை தளத்தில் வேகமாக பரவியது. இதையடுத்து புனிதத்தை மீட்க நேற்று துவங்கி, கோவிலில் ஆறு நாள் பரிகார பூஜை செய்யப்படுகிறது.
கேரளாவை சேர்ந்த யு டியூப் பிரபலம் ஜாஸ்மின் ஜாபர். இவர் மலையாள, 'பிக்பாஸ் டிவி' நிகழ்ச்சியில் பங்கேற்று இரண்டாம் இடம் பிடித்தவர். இவர், சமீபத்தில் திருச்சூர் மாவட்டம் குருவாயூரில் உள்ள குருவாயூரப்பன் கோவிலுக்கு சென்றார். அங்குள்ள குளத்தில் தன் கால்களை சுத்தம் செய்து, 'ரீல்ஸ்' எனப்படும், குறும்படம் எடுத்தார். இதை, 'இன்ஸ்டாகிராம்' சமூக ஊடகத்தில் பதிவேற்றியதை தொடர்ந்து ஏராளமானோர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
கோவிலின் புனிதம் கெட்டுவிட்டதாகவும், ஹிந்துக்களின் மத உணர்வை புண்படுத்தியதாகவும் கூறி, தேவஸ்தான நிர்வாகிகள் கோவில் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர்.
அதில், 'கோவிலின் புனிதமான பகுதியில் புகைப்படம் எடுக்க அனுமதியில்லை' என்ற, உயர் நீதிமன்ற உத்தரவு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையறிந்த ஜாஸ்மின் ஜாபர் நேற்று தன் செயலுக்காக பகிரங்க மன்னிப்பு கோரினார். அறியாமையால் அவ்வாறு செய்துவிட்டதாகவும், யாரையும் புண்படுத்தும் நோக்கம் தனக்கில்லை என்றும் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, நேற்று துவங்கி ஆறு நாள் பரிகார பூஜை செய்யவும், அப்போது கோவிலில் 18 சிறப்பு பூஜைகள் செய்யப்படும் என்றும் இதையொட்டி, கோவிலில் பக்தர்கள் தரி சனத்துக்கு அனுமதிக்கப்பட மாட்டர் என்றும் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

