ADDED : டிச 07, 2024 05:53 AM
பாலக்காடு; ஆறு மாத குறைபிரசவத்தில் பிறந்த, குறைந்த எடையுள்ள இரட்டை குழந்தைகளை, பாலக்காடு அரசு மருத்துவமனையில், 124 நாட்கள் சிகிச்சையளித்து ஆரோக்கியமாக மீட்டனர்.
இது குறித்து, சிகிச்சைக்கு தலைமை வகித்த டாக்டர் முரளிதரன் கூறியதாவது:
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், மேலார்கோடு பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கு, ஆலத்தூர் தாலுகா மருத்துவமனையில் ஆறு மாத குறைபிரசவத்தில் பிறந்த, இரட்டை பெண் குழந்தைகள் முறையே, 630, 650 கிராம் எடை இருந்தனர். எடை குறைவாக இருந்த குழந்தைகளுக்கு, தொடர் சிகிச்சை அளிப்பதற்காக பாலக்காடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். 124 நாட்கள் தீவிர சிகிச்சை அளித்து, குழந்தைகளை ஆரோக்கியமாக மீட்டெடுத்து, நேற்று மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு அனுப்பினர்.
தற்போது குழந்தைகள் முறையே, 2.250, 2.440 கிலோ எடை உள்ளனர். திருச்சூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலுள்ள தாய்ப்பால் வங்கியில் இருந்து, தாய்ப்பால் எடுத்து வந்து, குழந்தைகளுக்கு புகட்டப்பட்டது. மருத்துவர்கள் ஆதிரா, தனுஜா, சித்ரா, சங்கீதா, அஜிதா, பென்ஷித் ஆகியோர் குழந்தைகளை பராமரித்து வந்தனர். இவ்வாறு, கூறினார்.