ஜார்க்கண்ட் அரசியலில் திருப்பம்: 39 எம்.எல்.ஏ.க்கள் ஹைதராபாத் பயணம்
ஜார்க்கண்ட் அரசியலில் திருப்பம்: 39 எம்.எல்.ஏ.க்கள் ஹைதராபாத் பயணம்
UPDATED : பிப் 01, 2024 09:04 PM
ADDED : பிப் 01, 2024 08:54 PM

ராஞ்சி: ஜார்க்கண்டில் ஆளும் கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்கள் 39 பேர் திடீரென ஆந்திரா மாநிலம் ஹைதராபாத் சென்றனர். இதனால் ஜார்க்கண்ட் அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நில அபகரிப்பு வழக்கில் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், அமலாக்கத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார் . போக்குவரத்து அமைச்சர் சம்பாய் சோரன் புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஜார்க்கண்டில் போலி ஆவணங்கள் வாயிலாக பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலங்களை அபகரித்ததாக முதல்வர் ஹேமந்த் சோரன் மீது எழுந்த குற்றச்சாட்டில் சட்ட விரோத பணப் பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையினர் வழக்கு பதிவு செய்து எட்டு சம்மன் அனுப்பியும் ஆஜராகாமல் இருந்தார். பின் இரு நாட்களாக தேடி வந்த நிலையில் நேற்று இரவு ஹேமந்த் சோரனை கைது செய்தனர்.அதற்கு முன்பாக கவர்னரை சந்தித்து ராஜினமா கடிதத்தை ஹேமந்த் சோரன் வழங்கினார். புதிய முதல்வராக சாம்பாய் சோரன் அறிவிக்கப்பட்டார்.
இந்நிலையில் கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்த சாம்பாய் சோரன் .ஆதரவு எம்.எல்.ஏ.க்களையும் அழைத்துச்சென்று ஆட்சிஅமைக்க உரிமை கோரினார். இதனையடுத்து கவர்னர் பெரும்பான்மையை நிரூபிக்க கெடு விதித்தார். .
விமானத்தில் ஹைதராபாத் ஓட்டம்
மொத்தமுள்ள 81 உறுப்பினர்களில் பொரும்பான்மைக்கு 41 எம்.எல்.ஏ.க்கள் தேவை என்ற நிலையில் போதிய எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு இல்லை என கூறப்படுகிறது. குதிரை பேரம் நடக்கலாம் என கூறப்படுகிறது.
இதையடுத்து சாம்பாய் சோரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 39 பேரும் ஆந்திர மாநிலம் ஹைதராபாத் அழைத்து செல்லப்பட்டதாகவும், இவர்களில் 4 எம்.எல்.ஏ.க்கள் ராஞ்சி திரும்பி வந்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் சாம்பாய் சோரன் ஆட்சி அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.