சந்தேஷ்காலி விவகாரத்தில் திருப்பம்: வெற்று காகிதத்தில் கையெழுத்து வாங்கியதாக பெண்கள் புகார்
சந்தேஷ்காலி விவகாரத்தில் திருப்பம்: வெற்று காகிதத்தில் கையெழுத்து வாங்கியதாக பெண்கள் புகார்
UPDATED : மே 09, 2024 05:23 PM
ADDED : மே 09, 2024 05:15 PM

கோல்கட்டா: மேற்கு வங்க மாநிலம் சந்தேஷ்காலியில் பெண்கள் பாலியல் துன்புறுத்தல் விவகாரத்தில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. தங்களிடம் வெற்று காகிதத்தில் கையெழுத்து வாங்கி போலி புகார் அளிக்கப்பட்டதாக பெண் ஒருவரும், அவரது மருமகளும் கூறியுள்ளனர்.
மேற்கு வங்க மாநிலம் சந்தேஷ்காலியில் திரிணமுல் காங்கிரஸ் பிரமுகர் ஷேக் ஷாஜகான், அவரது ஆதரவாளர்கள் பழங்குடியினரின் நிலங்களை எல்லாம் அபகரித்து கொண்டதுடன், பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக ஷேக் ஷாஜகானை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த வழக்கை சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்த விவகாரத்தில், திடீர் திருப்பமாக இரண்டு பெண்கள் புகாரை திரும்ப பெற்றுள்ளனர். பெண் ஒருவர் கூறுகையில், சந்தேஷ்காலி விவகாரம் வெளியான உடன், இப்பகுதிக்கு தேசிய பெண்கள் கமிஷன் குழுவினர் வந்தனர். அப்போது, பியாலி என்ற பெண் எங்களை அழைத்து புகார் ஏதும் இருந்தால் தெரிவிக்கும்படி கூறினார்.
அதற்கு நான், 100 நாள் வேலை திட்டத்தில் சம்பளம் சரியாக வழங்கப்படவில்லை. சம்பள பணத்தை பெற்று கொடுத்தால் போதும். வேறு புகார் ஏதும் இல்லை என்றேன். பியாலி என்னிடம் வெற்றுக் காகிதத்தில் கையெழுத்து வாங்கினார். பிறகு தான் பாலியல் பலாத்கார சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களின் பட்டியலில் எனது பெயரும் இருந்தது தெரியவந்தது. இவ்வாறு அவர் கூறினார்.
இந்த பெண்ணின் மருமகள் கூறுகையில், பியாலி வெளியில் இருந்து வந்தவர். ஆரம்பத்தில் இங்கு நடந்த போராட்டத்தில் அவர் பங்கேற்றார். பிறகு அவருக்கு பா.ஜ., உடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. பொய் சொல்லி எங்களை சிக்க வைத்த அவர் தண்டிக்கப்பட வேண்டும். எங்களை போல் பலர் ஏமாற்றப்பட்டு இருக்கலாம். இவ்வாறு அவர் கூறினார். பியாலிக்கு எதிராக நாங்கள் திரும்பியதால் அவர் தரப்பு ஆட்களிடம் இருந்து புகார் வருகிறது எனவும் அவர் கூறினார்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பா.ஜ.,வின் சுவேந்து அதிகாரி உள்ளிட்டோர் மீது தேர்தல் ஆணையத்தில் திரிணமுல் காங்கிரஸ் கட்சி புகார் அளித்துள்ளது. சந்தேஷ்காலி விவகாரத்தில் பொய் குற்றச்சாட்டுகளை தங்கள் மீது அவர்கள் சுமத்தி உள்ளதாக குற்றம்சாட்டி உள்ளது.