ஆம் ஆத்மி கவுன்சிலர்கள் இருவர் பா.ஜ.,வுக்கு தாவல் இன்று நிலைக்குழு தேர்தல்
ஆம் ஆத்மி கவுன்சிலர்கள் இருவர் பா.ஜ.,வுக்கு தாவல் இன்று நிலைக்குழு தேர்தல்
ADDED : செப் 25, 2024 08:34 PM

புதுடில்லி:டில்லி மாநகராட்சி நிலைக்குழு உறுப்பினர் தேர்தல் இன்று நடக்க இருக்கும் நிலையில், ஆளும் கட்சியான ஆம் ஆத்மியின் இரண்டு கவுன்சிலர்கள் நேற்று, பா.ஜ.,வில் இணைந்தனர்.
ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த தில்ஷாத் காலனி கார்டன் கவுன்சிலர் பிரீத்தி மற்றும் கிரீன் பார்க் கவுன்சிலர் சரிதா போகத் ஆகிய இருவரும், டில்லி மாநில பா.ஜ., தலைவர் வீரேந்திர சச்தேவா, மத்திய இணை அமைச்சர் ஹர்ஷ் மல்ஹோத்ரா மற்றும் டில்லி மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் ராஜா இக்பால் சிங் ஆகியோர் முன்னிலையில் பா.ஜ.,வில் நேற்று சேர்ந்தனர்.
மாநகராட்சி நிலைக்குழுவுக்கு காலியாக இருக்கும் ஒரு உறுப்பினர் பதவிக்கு இன்று தேர்தல் நடக்கிறது. இந்நிலையில், ஆளும் கட்சியான ஆம் ஆத்மியில் இரு கவுன்சிலர்கள் கட்சி தாவியிருப்பது அக்கட்சிக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பா.ஜ., கவுன்சிலரான கமல்ஜித் செராவத், லோக்சபா தேர்தலில் மேற்கு டில்லி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதையடுத்து, கவுன்சிலர் மற்றும் நிலைக்குழு உறுப்பினர் ஆகிய பதவிகளை ராஜினாமா செய்தார். இதில், நிலைக்குழு உறுப்பினர் பதவிக்கு இன்று தேர்தல் நடக்கிறது.