ADDED : நவ 19, 2024 06:30 AM
ஹொஸ்கோட்: பெங்களூரில் திருட்டு வழக்கில் தலைமறைவாக இருந்த இருவர், 25 ஆண்டுகளுக்குப் பின் கைது செய்யப்பட்டனர்.
பெங்களூரு, தேவனஜீவனஹள்ளியின் சையது ஜமால், 50, பனசங்கரியைச் சேர்ந்த சுஹேல், 51. இருவரும் கூலித் தொழிலாளர்கள்.
இருவர் மீதும் பல்வேறு குற்ற வழக்குகள் பதிவாகி உள்ளன. 25 ஆண்டுகளுக்கு முன்பு திருட்டு வழக்கில் இருவரும் தலைமறைவாகினர்.
இந்நிலையில், தங்கள் உறவினர்களை பார்க்க, இவ்விரும் வந்துள்ளதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. திருமல ஷெட்டிஹள்ளி போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சுந்தர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
ஒரே நேரத்தில் இருவரும், அவரவர் வீடுகளில் நேற்று கைது செய்யப்பட்டனர். இதன் மூலம், திருமல ஷெட்டிஹள்ளியில் 5, அனுகொண்டனஹள்ளியில் 5, ஹொஸ்கோட்டில் 5, நஞ்சன்கூடுவில் 7, சர்ஜாபூரில் 1, வர்த்துாரில் 1, கெங்கேரியில் 1, ஞானபாரதியில் 1, கோலாரின் மாலுாரில் 20 என, இவர்கள் மீது பதிவான வழக்குகள் முடிவுக்கு வந்தன.

