போலி ஹெல்ப்லைன் வாயிலாக முதியவரிடம் ரூ.13.85 லட்சம் ஏமாற்றிய இருவர் கைது
போலி ஹெல்ப்லைன் வாயிலாக முதியவரிடம் ரூ.13.85 லட்சம் ஏமாற்றிய இருவர் கைது
ADDED : செப் 05, 2025 01:50 AM
புதுடில்லி:டில்லியில், வங்கி ஒன்றின் போலி ஹெல்ப்லைன் துவக்கி, 13.85 லட்ச ரூபாயை ஏப்பமிட்ட கும்பலில் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் துவக்கிய போலி கால் சென்டர் மற்றும் அதற்கான போன் எண்களை முடக்கியுள்ள போலீசார், பிடிபட்ட கும்பலிடம் விசாரித்து வருகின்றனர்.
கிழக்கு டில்லியை சேர்ந்த கமலாபதி ராம் என்ற 70 வயது நபரை தொடர்பு கொண்ட ஒருவர், குறிப்பிட்ட வங்கியிலிருந்து பேசுவதாக கூறினார். அதற்காக, அந்த நபர், போலி ஹெல்ப்லைன் போன் எண்ணை பயன்படுத்தியதை அறியாத அந்த நபர் மேற்கொண்ட அழைப்பு வாயிலாக, ஒரே நேரத்தில், 13.85 லட்ச ரூபாயை இழந்தார்.
அவர் அளித்த புகாரின் படி, விசாரணை மேற்கொண்ட போலீசார், உமர் முக்தார், 57, மற்றும் அஸ்லாம் என்ற முகமது சஹிர் கஸ்மி, 26, ஆகிய இருவரை பிடித்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், பல மாநிலங்களில் வங்கிக்கணக்குகளை துவக்கி, மோசடியாக பெற்ற பணத்தை டிபாசிட் செய்து வைத்திருந்ததை கண்டறிந்தனர்.
அந்த வகையில், ஜார்க்கண்ட் மாநிலத்தின் வங்கி ஒன்றில், முக்தார் பெயரிலான வங்கிக்கணக்கில், 2 லட்சம் ரூபாய் டிபாசிட் செய்யப்பட்டிருந்ததை அறிந்தனர்.
தொடர்ந்து முக்தாரிடம் நடத்திய விசாரணையில், பிரபல வங்கிகளின் பெயரில் போலி ஹெல்ப்லைன் துவக்கி, பல முதியவர்களை ஏமாற்றியதை ஒப்புக் கொண்டார். அவரை கைது செய்த போலீசார், தொடர்ந்து விசாரிக்கின்றனர்.
கைதான நபர்களிடம் இருந்து பணம், மொபைல் போன்கள், போலி ஹெல்ப்லைனுக்கான சிம் கார்டுகள் போன்றவற்றை போலீசார் பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.