ADDED : பிப் 11, 2025 08:04 PM
மீரட்:உத்தர பிரதேசத்தில் நேற்று காலை, துப்பாக்கியால் சுட்டு இரண்டு பசு கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டனர்.
உ.பி., மாநிலம் மீரட் மாவட்டம் சிட்வானா கிராமத்தில் பசுக்கள் கொல்லப்பட்டதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. நேற்று அதிகாலை போலீசார் அங்கு சென்றனர். பசு கடத்தல்காரர்கள் சென்ற காரை சுற்றி வளைத்தனர். தப்பிக்க நினைத்து அதிவேகமாக ஓட்டியதில் சாலையோர மரத்தில் கார் மோதியது.
காரில் இருந்து இரண்டு கடத்தல்காரர்கள் இறங்கி ஓடினர். போலீசாரும் விரட்டினர். அப்போது போலீசார் துப்பாக்கியால் சுட்டு கலா என்ற நவீத் மற்றும் சோட்டா என்ற மினாஜ் - ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, இரண்டு கைத்துப்பாக்கிகள், தோட்டாக்கள், கார் மற்றும் பசுவை அறுப்பதற்கு பயன்படுத்திய கருவிகள், கயிறு, ஊசி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
காலில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து காயம் அடைந்த இருவரும், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
கூட்டாளிகளான ஜுனைத் மற்றும் ஆரிப் ஆகியோருடன் சேர்ந்து பசுவை வெட்டியதை இருவரும் ஒப்புக்கொண்டனர். விசாரணை நடக்கிறது.