ADDED : செப் 18, 2024 09:39 PM
ரன்ஹோலா:டில்லியின் ரன்ஹோலாவில் உள்ள பேக்கரி கடைகளில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக இருவர் கைது செய்யப்பட்டனர்.
ரன்ஹோலாவில் உள்ள பேக்கரி கடைகளில் 14ம் தேதி துப்பாக்கிச்சூடு நடந்தது. பிரபல கோகி கும்பலைச் சேர்ந்த யோகேஷ் துண்டாவின் உத்தரவின் பேரில் துப்பாக்கிச் சூடு நடந்ததாக சமூக ஊடகங்களில் பதிவு வைரல் ஆனது.
துப்பாக்கிச் சூடு குறித்து விசாரிக்க சிறப்புப் பிரிவு அமைக்கப்பட்டது. சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், ஹரியானாவைச் சேர்ந்த ராகுல், 25, பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸைச் சேர்ந்த மந்தீப், 28, ஆகிய இருவரை சிறப்புப் பிரிவு போலீசார் கைது செய்தனர்.
துப்பாக்கிச் சூடு நடத்தி, கோகி கும்பலைச் சேர்ந்த யோகேஷ் துண்டா 5 கோடி ரூபாய் பறித்ததாகக் கூறப்பட்டது. சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்டவர்களுக்குச் சொந்தமான பல இடங்களில் போலீசார் தற்போது சோதனை நடத்தி வருகின்றனர். கைது செய்ய போலீசார் முயன்றபோது தப்ப முயன்ற மந்தீப்பை துப்பாக்கியால் சுட்டு போலீசார் பிடித்தனர்.

