தொழிலதிபர் கொலை வழக்கில் துப்பாக்கியால் சுட்டு இருவர் பிடிப்பு
தொழிலதிபர் கொலை வழக்கில் துப்பாக்கியால் சுட்டு இருவர் பிடிப்பு
ADDED : மார் 11, 2026 02:10 AM

புதுடில்லி,
ஒரு மாதத்திற்கு முன் நடந்த, தொழிலதிபர் கொலையில் இருவருக்கு தொடர்பு இருப்பதை போலீசார் கண்டறிந்தனர்.
முகமது இர்பான் மற்றும் ஐஸ்வர்யா பாண்டே ஆகிய இரு உத்தர பிரதேச மாநில கொள்ளையர்கள் மீது, 50க்கும் மேற்பட்ட வழக்குகள் இருந்தன.
போலீசாரின் பிடியில் சிக்காமல் இருந்த அவ்விருவரும், அவுட்டர் நார்த் டில்லி மாவட்டத்தின் பாவானா என்ற பகுதியை சேர்ந்தவர்கள். இருவரும், டில்லி அருகே உள்ள ரோஹினி என்ற பகுதிக்கு, பைக்கில் வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அப்போது, பைக்கில் வந்த இருவரும், போலீசாரை கண்டதும், தாங்கள் மறைத்து வைத்திருந்த துப்பாக்கிகளை எடுத்து, போலீசாரை நோக்கி சுட்டனர். இதில், போலீஸ் துணை கமிஷனர் ஒருவர் அணிந்திருந்த 'புல்லட் புரூப்' ஜாக்கெட்டில், குண்டு துளைத்தது. எனினும், அவருக்கு காயம் ஏற்படவில்லை.
அதையடுத்து, இருவரை நோக்கி, போலீசார் சரமாரியாக சுட்டதில், லேசாக காயம் அடைந்த இருவரும், பைக்கில் இருந்து விழுந்தனர். இருவரையும் கைது செய்து, கொத்தாக அள்ளிய போலீசார், போலீஸ் ஸ்டேஷன் அழைத்து சென்று, விசாரிக்கின்றனர்.
இந்த வழக்கு தொடர்பாக, கடந்த மாதம், ஐந்து பேர் கைது செய்யப் பட்டுள்ளனர்.

