ADDED : ஜன 20, 2025 07:08 AM

ராய்ச்சூர்: தெலுங்கானாவில் இருந்து கர்நாடகாவிற்கு ரயில் மூலமாக கெமிக்கல் சாராயம் கடத்தி வந்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
தெலுங்கானா மாநிலம், நாராயணபேட் மாவட்டத்தில் இருவர் கெமிக்கல் சாராய வியாபாரம் செய்து வந்தனர். இவர்கள் அதிகமாக பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டு, கெமிக்கல் சாராயத்தை கர்நாடகா மாநிலம் ராய்ச்சூர் மாவட்டத்தில் விற்பனை செய்வதற்கு திட்டம் தீட்டினர்.
இதன்படி, நேற்று, தெலுங்கானா மாநில எல்லையில் உள்ள கிருஷ்ணா ரயில் நிலையத்தில் இருந்து ரயில் மூலம் ராய்ச்சூர் ரயில் நிலையத்திற்கு சாராயம் கொண்டு வந்தனர். இது குறித்து கலால் துறை போலீசாருக்கு தகவல் கிடைத்து உள்ளது.
சாராயத்தை ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டில்களில் அடைத்து, சாக்கில் மூட்டையாக கட்டி கொண்டு வந்து உள்ளனர். ராய்ச்சூர் ரயில் நிலையத்தில் இறங்கிய இருவரும் பெரிய அளவிலான சாக்கு மூட்டையுடன் நடந்து சென்றனர்.
ரயில்வே போலீசாருடன் வந்த கலால் துறை போலீசார், அவர்களை பிடித்து விசாரித்தனர். அவர்களிடம் இருந்து 250 லிட்டர் கெமிக்கல் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த சாரயத்தை ராய்ச்சூரில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு விற்பனை செய்ய திட்டமிட்டது தெரிய வந்தது. பறிமுதல் செய்த சாராயத்தை போலீசார் அழித்தனர். இருவரும் கைது செய்யப்பட்டனர்.