வடமாநிலங்களில் மழை: சுரங்கப்பாதை வெள்ளத்தில் சிக்கி வங்கி அதிகாரிகள் இருவர் பலி
வடமாநிலங்களில் மழை: சுரங்கப்பாதை வெள்ளத்தில் சிக்கி வங்கி அதிகாரிகள் இருவர் பலி
ADDED : செப் 14, 2024 11:26 PM

புதுடில்லி: டில்லி புறநகர் பகுதியான பரிதாபாதில், கனமழையால் சுரங்கப்பாதை வெள்ளத்தில் கார் சிக்கியதில், அதில் இருந்த வங்கி அதிகாரிகள் இருவர் பலியாகினர்.
டில்லி, ஹரியானா, ஹிமாச்சல பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது.
டில்லியில், கடந்த ஒரு மாதத்தில் மட்டும், 100 செ.மீ., மழை பெய்துள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. ராஜஸ்தானில் டோல்பூர், ஜலோர் உள்ளிட்ட பெரும்பாலான மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.
அடுத்த சில நாட்களில், உத்தர பிரதேசம், டில்லி, ராஜஸ்தான், உத்தரகண்ட், ஹரியானா, பஞ்சாப், ஹரியானா, சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் பலத்த மழை பெய்யும் என, வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில், டில்லியின் புறநகர் பகுதியான ஹரியானா மாநிலம் பரிதாபாதில் நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையால், நகரின் பல பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
குருகிராமின் செக்டார் 31 பகுதியில் இயங்கி வரும் தனியார் வங்கி கிளையின் மேலாளர் புன்னியஸ்ரேயா சர்மா, 48, மற்றும் காசாளர் விராஜ் திவேதி, 26, ஆகிய இருவரும் பணி முடிந்து மஹிந்திரா எக்ஸ்.யு.வி., 700 காரில் நேற்று முன்தினம் இரவு வீடு திரும்பினர்.
அவர்கள், பழைய பரிதாபாத் ரயில்வே சுரங்க பாலத்தை அடைந்த போது, அதில் மழைநீர் தேங்கியிருந்தது.
கார் செல்லும் அளவு தான் மழைநீர் தேங்கியிருப்பதாக நினைத்து, புன்னியஸ்ரேயா சுரங்க பாதைக்குள் காரை செலுத்தியுள்ளார்.
சிறிது துாரம் சென்றதும் கார் மூழ்குவதை அறிந்து இருவரும் வெளியேறி நீந்தி தப்பிக்க முயன்றுள்ளனர். ஆனால் நீந்த முடியாமல் மூழ்கிவிட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார், முதலில் புன்னியஸ்ரேயாவின் உடலை மீட்டனர்.
பல மணிநேர தேடுதலுக்கு பின், காசாளர் விராஜ் உடல் நேற்று அதிகாலை 4:00 மணிக்கு கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, சுரங்கத்தில் தேங்கிய மழைநீரை மோட்டார் வைத்து விடிய விடிய அகற்றினர்.