கார் திருடும் இருவர் பிடிபட்டனர் ஐந்து கார்கள், துப்பாக்கி பறிமுதல்
கார் திருடும் இருவர் பிடிபட்டனர் ஐந்து கார்கள், துப்பாக்கி பறிமுதல்
ADDED : ஜூலை 26, 2025 10:18 PM
புதுடில்லி,:சொகுசுக் கார்களை குறி வைத்து திருடும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டு, ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள ஐந்து கார்கள், துப்பாக்கி, போலி சாவிகள் மற்றும் நம்பர் பிளேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுகுறித்து, கிழக்கு மாவட்ட போலீஸ் துணைக் கமிஷனர் அபிஷேக் தானியா கூறியதாவது:
தலைநகர் டில்லியில் கார் திருட்டு சமீபகாலமாக அதிகரித்து வந்தது. குறிப்பாக, எஸ்.யு.வி., ரக கார்களை திருடி, வெளிமாநிலங்களில் விற்கும் கும்பல் குறித்து தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
சிறையில் இருந்து ஜாமினில் சென்ற அஷ்ரப் சுல்தான், மற்றும் திருடப்பட்ட கார்களை பிரித்து மாற்றிய இர்ஷாத் என்ற பாபா ஆகிய இருவரும் சொகுசுக் கார்களை குறி வைத்து திருடுவது கண்டுபிடிக்கப்பட்டது.
காஜிப்பூர் நாலா சாலை அருகே போலீசார் வாகன சோதனை நடத்திய போது, அஷ்ரப் சுல்தான் கைது செய்யப்பட்டு, கார் மற்றும் துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.
அவர் அளித்த வாக்குமூலத்தின்படி, பிலாஸ்பூரில் கேரேஜ் நடத்தி வந்த இர்ஷாத் என்ற பாபா கைது செய்யப்பட்டார்.
இருவரிடமும் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணை அடிப்படையில், டில்லி, உத்தரப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களின் பல இடங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.
போலி கார் சாவிகள், போலி நம்பர் பிளேட்டுகள், திருடப்பட்ட ஐந்து எஸ்.யு.வி., ரக கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
டில்லியில் திருடும் கார்களுக்கு இர்ஷாத் நடத்தும் கேரேஜில் நம்பர் பிளேட் பொருத்தி சத்தீஸ்கர், ராஜஸ்தான், குஜராத் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் விற்பனை செய்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

