பாலக்காடில் லாரி - கார் மோதல் சென்னை பெண்கள் இருவர் பலி
பாலக்காடில் லாரி - கார் மோதல் சென்னை பெண்கள் இருவர் பலி
ADDED : ஆக 18, 2025 01:52 AM

பாலக்காடு: பாலக்காடு அருகே நின்றிருந்த லாரியின் பின்பக்கம், கார் மோதிய விபத்தில் சென்னையை சேர்ந்த இரு பெண்கள் உயிரிழந்தனர்.
சென்னை, பெரும்பாக்கத்தை சேர்ந்தவர் சாய்ராம், 48. இவரது மனைவி லாவண்யா, 40. இவர்களுக்கு, 8 வயது மகன் உள்ளார். அதேபோல், சாய்ராமின் நண்பர் செல்வம், 45. இவரது மனைவி மலர், 40. இவர்களுக்கு, 8, 3 வயது மகன்கள் உள்ளனர்.
இவர்கள், எர்ணாகுளம் காக்கநாடு பகுதியில், குழந்தைகளுக்கான நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின், நேற்று அதிகாலை, 'மஹிந்திரா' காரில், கொச்சி- - கோவை தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்னைக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.
செல்வம் காரை ஓட்டிய நிலையில், காலை, 5:45 மணி அளவில், பாலக்காடு மாவட்டம், வட்டப்பாறை பகுதியில், கட்டுப்பாட்டை இழந்த கார், சாலை ஓரம் நின்றிருந்த லாரியின் பின்பக்கம் மோதியது.
இதில், லாவண்யா, மலர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த சாய்ராம் மற்றும் குழந்தைகளை, அப்பகுதி மக்கள் அருகிலுள்ள தனியார் மருத்துவமனையிலும், தீவிர சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனையிலும் சேர்த்தனர்.
வாளையார் போலீசார், தீயணைப்பு படையினர், இறந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக, மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
செல்வம் காயமின்றி உயிர் தப்பினார். விபத்து குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.