ADDED : பிப் 13, 2025 09:58 PM
சாணக்யாபுரி:புதிதாக பதவியேற்க உள்ள பா.ஜ., அரசில் இரண்டு துணை முதல்வர் பதவிகள் உருவாக்கப்படுமென தகவல் வெளியாகி உள்ளது.
டில்லியில் 26 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியை பா.ஜ., பிடித்துள்ளது. முதல்வர் பதவிக்கான வேட்பாளரை அறிவிக்காமலேயே தேர்தலை சந்தித்து, தனிப்பெரும்பான்மையுடன் இங்கு ஆட்சியை பா.ஜ., கைப்பற்றியுள்ளது.
முதல்வரை அறிவிப்பதில் பா.ஜ.,வில் உட்கட்சிப் பூசல் நிலவுவதாக ஆம் ஆத்மி குற்றஞ்சாட்டியுள்ள நிலையில், இதுகுறித்து மாநில பா.ஜ., வட்டாரங்களில் கூறப்படுவதாவது:
பா.ஜ.,வில் உட்கட்சிப் பூசல் இருப்பதாக ஆம் ஆத்மி கனவு காண்கிறது. முதல்வரை தேர்ந்தெடுப்பதில் எங்களுக்குள் எந்த குழப்பமும் இல்லை. வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை முடித்து பிரதமர் தாயகம் திரும்புவதற்காக காத்திருக்கிறோம்.
அத்துடன் நாட்டுக்கே முன்மாதிரியாக தலைநகர் திகழ்கிறது. பல்வேறு சாதிகள், சமூகங்கள், பிராந்திய பின்னணியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.,க்களுக்கு துணை முதல்வர் பதவி வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
இதுபோன்ற நடைமுறை பா.ஜ., ஆளும் மத்திய பிரதேசம், உ.பி., ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ளது.
இந்த முன்மொழிவு, தற்போது தேசியத் தலைமையின் பரிசீலனையில் உள்ளது. முதல்வர், பிற அமைச்சர்களின் பெயர்களை இறுதி செய்வதுடன் துணை முதல்வர் பதவி குறித்தும் தேசிய தலைமை இறுதி முடிவெடுக்கும்.
அதன்பின், வரும் ஞாயிற்றுக்கிழமை பா.ஜ.,வின் சட்டசபைத் தலைவர் முறைப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்.
பஞ்சாபிகள், சீக்கியர்கள், பூர்வாஞ்சலிகள், உத்தரகாண்டிகள், வைஷ்யர்கள், ஜாட் உள்ளிட்ட சமூகத்தின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்தவர்கள், பா.ஜ.,வின் எம்.எல்.ஏ.க்களாகிவிட்டனர். அவர்களுக்கு பா.ஜ., அரசில் பிரதிநிதித்துவ அளிக்கும் வகையில் பட்டியல் தயாரிக்கப்படுகிறது.
இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.
புதுடில்லி தொகுதியில் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலை தோற்கடித்த பர்வேஷ் வர்மா, டில்லி பா.ஜ., முன்னாள் தலைவர்கள் விஜேந்தர் குப்தா, சதீஷ் உபாத்யா மற்றும் மஞ்சிந்தர் சிங் சிர்சா, பவன் சர்மா, ஆஷிஷ் சூட், ரேகா குப்தா, ஷிகா ராய் உள்ளிட்ட பலரும் முதல்வர் பதவிக்கான பட்டியலில் உள்ளனர்.
தவிர பா.ஜ., ஆளும் மாநிலங்களில் இப்போது ஒரு பெண் முதல்வர் கூட இல்லை என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், டில்லி முதல்வர் பதவி, ஒரு பெண்ணுக்கு வழங்குவது குறித்தும் தேசிய தலைமை ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.