ADDED : ஜூலை 27, 2025 01:34 AM

ஹைதராபாத் : தெலுங்கானாவின் ஹைதராபாத் அருகே நடந்த சாலை விபத்தில், ஆந்திராவை சேர்ந்த இரண்டு டி.எஸ்.பி.,க்கள் உயிரிழந்தனர்.
ஆந்திர உளவுத்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் சிலர், ஆந்திராவின் விஜயவாடாவிலிருந்து தெலுங்கானாவின் ஹைதராபாதிற்கு வேலை நிமித்தமாக காரில் சென்று கொண்டிருந்தனர்.
ஹைதராபாதில் இருந்து 50 கி.மீ., தொலைவில் உள்ள சவுட்டுப்பல் என்ற இடத்தில் சென்றபோது, முன்னால் சென்ற வாகனம் ஒன்று திடீரென நின்றது.
அந்த வாகனத்தின் மீது மோதாமல் இருக்க முயன்றபோது, போலீசார் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பில் மோதி எதிர்புறம் விழுந்தது. அப்போது எதிர்திசையில் வந்த வாகனம் மோதியதில், உளவுத்துறையில் பணியாற்றிய இரண்டு டி.எஸ்.பி.,க்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும், ஏ.டி.எஸ்.பி., மற்றும் வாகன ஓட்டுநர் காயமடைந்தனர். அவர்கள் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்த இருவரும், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் சிங்கப்பூர் பயணம் தொடர்பான பணிக்காக சென்றதாக கூறப்படுகிறது.