காப்பகத்தில் சிறுமியருக்கு சித்ரவதை அரசு ஊழியர்கள் இருவர் கைது
காப்பகத்தில் சிறுமியருக்கு சித்ரவதை அரசு ஊழியர்கள் இருவர் கைது
ADDED : டிச 05, 2024 07:16 AM

சிக்கபல்லாபூர்: அரசு சார்ந்த சிறுமியர் காப்பகத்தில், சிறுமியரை கட்டிப் போட்டுத் தாக்கியும், பலவந்தமாக விபசாரத்தில் தள்ளியும் இம்சிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக, காப்பக ஊழியர்கள் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சிக்கபல்லாபூர் நகரின், பி.பி.சாலையில் மகளிர், குழந்தைகள் நலத்துறை சார்ந்த சிறுமியர் காப்பகம் உள்ளது. குடும்பத்தினரால் பாதிக்கப்பட்ட சிறுமியர், ஆதரவற்ற, பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமியருக்கு, இந்த காப்பகம் அடைக்கலம் தருகிறது.
பாதிக்கப்பட்ட சிறுமியருக்கு தைரியமூட்டி, புது வாழ்வு ஏற்படுத்தித் தரும் பொறுப்பில் உள்ள காப்பகம், அவர்களுக்கு நரகமாக மாறியுள்ளது. இங்கு அடைக்கலம் பெற்றுள்ள சிறுமியருக்கு சரியாக உணவு கிடைப்பது இல்லை. உடல் ரீதியில், மன ரீதியில் துன்புறுத்தப்படுகின்றனர்.
காப்பக ஊழியர் மமதா, உதவியாளர் சரஸ்வதி ஆகிய இருவரும் கூட்டு சேர்ந்து, சிறுமியரை பலவந்தமாக விபசாரத்தில் தள்ளுகின்றனர். மறுக்கும் சிறுமியரை கட்டிவைத்துத் தாக்குவது, உணவு, குடிநீர் கொடுக்காமல் தாக்கியும், திட்டியும் இம்சிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சூடும் போட்டுள்ளனர்.
இதையறிந்த சிக்கபல்லாபூர் மூத்த சிவில் நீதிபதி, சட்டசேவைகள் ஆணைய உறுப்பினர்கள், சமீபத்தில் சிறுமியர் காப்பகத்துக்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போதுதான் இங்கு நடக்கும் அநியாயங்கள் வெளிச்சத்துக்கு வந்தன. இதை பற்றி விசாரணை நடத்தும்படி, மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தர விட்டனர்.
மாவட்ட கலெக்டரின் உத்தரவுபடி, சிக்கபல்லாபூர் மகளிர் போலீஸ் நிலையத்தில், மமதா, சரஸ்வதி மீது புகார் செய்யப்பட்டது. போலீசாரும் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்துகின்றனர்.
காப்பகத்தில் அடைக்கலம் பெற்றுள்ள பாலியல் பாதிப்பு சிறுமியரை, ஊழியர் மமதா பணத்தாசையால் விபசாரத்தில் ஈடுபடுத்துவதாக, சில மாதங்களாகவே குற்றச்சாட்டு இருந்தது. ஆனால் மகளிர், குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள், எந்த நடவடிக்கையும் எடுக்காததால், அவரது கொடூரம் எல்லை மீறியதாக சிறுமியர் கூறியுள்ளனர்.