விதிமீறல்களில் ஈடுபட்ட இரண்டு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் சஸ்பெண்ட்: கேரள அரசு அதிரடி
விதிமீறல்களில் ஈடுபட்ட இரண்டு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் சஸ்பெண்ட்: கேரள அரசு அதிரடி
UPDATED : நவ 12, 2024 05:04 PM
ADDED : நவ 12, 2024 03:37 PM

திருவனந்தபுரம்: கேரள மாநில தொழில்துறை இயக்குநர் கே.கோபாலகிருஷ்ணன், விவசாயத்துறைக்கான சிறப்பு செயலாளர் பிரசாந்த் ஆகியோரை, விதிமீறல்களில் ஈடுபட்டதற்காக அம்மாநில அரசு சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டு உள்ளது.
கேரளாவை சேர்ந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி கே. கோபாலகிருஷ்ணன், திருவனந்தபுரம் மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், வாட்ஸாப் செயலி பயன்பாட்டுக்கான, தன் மொபைல் எண்ணை யாரோ 'ஹேக்' செய்துவிட்டதாகவும், அந்த எண்ணில் இருந்து பல்வேறு அதிகாரிகளை சேர்த்து, ' ஹிந்து கம்யூனிட்டி குரூப்' என்ற பெயரில் வாட்ஸாப் குழு துவங்கி உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த விபரம் தெரியவந்ததும், அந்த குழுவை உடனடியாக கலைத்துவிட்டதாகவும் அந்த எண்ணில் இருந்து 'மல்லு ஹிந்து ஆபீசர்ஸ்', 'மல்லு முஸ்லிம் ஆபிசர்ஸ்' என்ற பெயரிலும் குழுக்கள் துவக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட்டது. அதிகாரிகள் விசாரணையில், கோபாலகிருஷ்ணன் மொபைல் போன் 'ஹேக்' செய்யப்படவில்லை என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவரை சஸ்பெண்ட் செய்து மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது.
அதேபோல், கூடுதல் தலைமைச் செயலாளர் ஜெயதிலக்கை சமூக வலைதளம் மூலம் பிரசாந்த் விமர்சனம் செய்து வந்தார். மேலும் தனது உத்தரவுகளை மதிக்காத கீழ்நிலை அதிகாரிகளின் எதிர்காலத்தை ஜெயதிலக் சீர்குலைப்பதாகவும், அவரது மனநிலை சரியில்லை எனவும் பிரசாந்த் குற்றம்சாட்டியிருந்தார். இது தொடர்பாக ஜெயதிலக் புகார் அளித்து இருந்தார். இதனையடுத்து பிரசாந்த்தையும் மாநில அரசு சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது.