உ.பி., கோவிலில் கூட்ட நெரிசல் இருவர் பலி; 32 பேர் காயம்
உ.பி., கோவிலில் கூட்ட நெரிசல் இருவர் பலி; 32 பேர் காயம்
ADDED : ஜூலை 29, 2025 04:26 AM
பாராபங்கி : உத்தர பிரதேசத்தில், கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இருவர் உயிரிழந்தனர்; குழந்தைகள், பெண்கள் உட்பட 32 பேர் காயமடைந்தனர்.
உத்தர பிரதேசத்தின் பாராபங்கி மாவட்டத்தில் உள்ள ஹைதேர்கர் பகுதியில் அவ்சனேஷ்வர் கோவில் உள்ளது.
வட மாநிலத்தவர் புனிதமாக கருதும் ஷ்ரவண் மாதத்தை ஒட்டி, இந்த கோவிலில் நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தன.
சோமவாரத்தை ஒட்டி நடந்த நீராடும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள், கோவிலில் குவிந்தனர்.
அதிகாலை 2:00 மணிக்கு கோவிலின் மேலே சென்ற உயர் அழுத்த மின்சார கம்பிகள் மீது, அங்குள்ள குரங்குகள் குதித்து விளையாடியதாக கூறப்படுகிறது.
அது அறுந்து, கோவில் வளாகத்தில் பக்தர்கள் நின்றிருந்த பகுதியில் மேலே இருந்த இரும்பு கூரை மீது விழுந்தது.
இதனால், அப்பகுதியில் மின்சாரம் பாய்ந்ததாக பரவிய தகவலை தொடர்ந்து, பக்தர்கள் அலறியடித்து நாலா புறமும் தலைதெறிக்க ஓடினர். இதனால், அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் முண்டியடித்து வெளியேற முயன்றதில், கூட்டத்தில் சிக்கி இளைஞர் உட்பட இருவர் உயிரிழந்தனர்.
காயமடைந்த 32 பேர் உடனடியாக ஹைதேர்கர் பகுதியில் இருந்த மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இவர்களில், 10 பேர் மேல் சிகிச்சைக்காக திரிவேதிகஞ்ச் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்களில், இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
சம்பவத்தைத் தொடர்ந்து கோவிலில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
இரண்டு மணி நேரத்துக்கு பின், பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப் பட்டனர்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் என அறிவித்துள்ள உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்க உத்தர விட்டார்.