ADDED : செப் 19, 2024 12:57 AM
பல்ராம்பூர், சத்தீஸ்கர் மாநிலம் பல்ராம்பூர் பகுதி முகாமில் தங்கியிருந்த சக வீரர்கள் இருவரை சத்தீஸ்கர் ஆயுதப்படை வீரர் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார்.
சத்தீஸ்கரின் பல்ராம்பூர் மாவட்டம் சம்பிரிபாத் அருகேயுள்ள புடாஹிமோட் பகுதியில் சத்தீஸ்கர் ஆயுதப்படை 11வது பட்டாலியன் முகாம் செயல்படுகிறது.
இதில் பணியாற்றி வரும் கான்ஸ்டபிள் அஜய் சிதார் என்பவர் நேற்று காலை 11: 00 மணியளவில் திடீரென தான் வைத்திருந்த சர்வீஸ் துப்பாக்கியால் அருகில் இருந்த சகவீரர்களை சரமாரியாக சுட்டார்.
இதில் ரூபேஷ் பாட்டீல் என்ற கான்ஸ்டபிள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயம் அடைந்த மற்றொரு கான்ஸ்டபிள் சந்திப் பாண்டே மருத்துவமனை செல்லும் வழியில் பலியானார்.
காயம் அடைந்த அம்புஜ் சுக்லா மற்றும் ராகுல் பாஹேல் ஆகியோர் குஷ்மி பகுதி மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.
துப்பாக்கி சத்தம் கேட்டு விரைந்து வந்த மற்ற ஊழியர்கள் அஜய் சிதாரை சுற்றி வளைத்து பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
சக வீரர்களை அஜய் சுட்டது ஏன் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

