ADDED : ஜூன் 19, 2025 12:16 AM
ருத்ரபிரயாக்: உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத் கோவிலுக்கு செல்லும் வழியில், மலைப்பாதையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இருவர் உயிரிழந்தனர்.
உத்தராகண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் உள்ளது கேதார்நாத் கோவில். 12 ஜோதிர்லிங்கங்கள் மற்றும் நான்கு சார் தாம் யாத்திரை கோவில்களில் ஒன்றாகவும் கேதார்நாத் விளங்குகிறது.
நேற்று கேதார்நாத் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் சென்று கொண்டிருந்தனர். அவர்கள் மலைப்பாதை வழியாக ஜங்கிள்சட்டி காட் பகுதியில் காலை 11:00 மணியளவில் சென்றபோது, திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது.
அப்போது உருண்டு வந்த பாறைகள் பக்தர்கள், டோலி துாக்குவோர் மீது விழுந்தன. இதையடுத்து, பள்ளத்தாக்கில் விழுந்த பக்தர்களை மீட்கும் பணியில் உள்ளூர்வாசிகள் உதவியுடன் போலீசார் மற்றும் பேரிடர் மீட்புப்படையினர் ஈடுபட்டனர்.
பள்ளத்தில் விழுந்த ஐந்து பேர் கயிறு கட்டி மீட்கப்பட்டனர். இதில் காஷ்மீரை சேர்ந்த டோலி துாக்கும் தொழிலாளர்கள் நிதின் குமார், சந்திரசேகர் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
குஜராத்தின் பாவ் நகரைச் சேர்ந்த ஆகாஷ் சைத்ரியா என்ற பெண் உட்பட மூவர் காயம் அடைந்தனர்.

