ADDED : நவ 12, 2024 10:05 PM

எலஹங்கா; பெங்களூரு விமான நிலைய சாலையில் ஏற்பட்ட, சங்கிலி தொடர் விபத்துகளில் இருவர் பலியாகினர்.
பெங்களூரு நகரில் இருந்து பல்லாரி செல்லும் சாலையில், தேவனஹள்ளியில் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் உள்ளது.
இந்த சாலையில் எலஹங்கா மேம்பாலத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவில், சிமென்ட் லாரி சென்றது. முன்னால் சென்ற கார் மீது, லாரி மோதியது. இதனால் சாலையில் லாரி, காரை நிறுத்திவிட்டு, டிரைவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக விமான நிலையத்தில் இருந்து, பெங்களூரு நகரை நோக்கி பி.எம்.டி.சி., வால்வோ பஸ் வந்தது. டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் தறிகெட்டு ஓடியது.
சாலையில் நின்று வாக்குவாதம் செய்த லாரி, கார் டிரைவர்கள் மீது பஸ் மோதியது. இதில், டிரைவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
பஸ்சின் முன்பகுதி பலத்த சேதம் அடைந்தது. எலஹங்கா போக்குவரத்து போலீசார் அங்கு சென்றனர். உயிரிழந்தவர்கள், லாரி டிரைவர் குல்தீப், 42, கார் டிரைவர் ஜெகதீஷ், 40, என்பது தெரிந்தது.
பஸ் பயணியர் யாருக்கும் காயம் இல்லை. அவர்கள் மாற்று பஸ்சில் அனுப்பி வைக்கப்பட்டனர்.